கோப்புப்படம் 
இந்தியா

உ.பி.சட்டப்பேரவை ஊழியர்கள் 20 பேருக்கு கரோனா: 2 நாட்களில் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் அதிர்ச்சி

பிடிஐ

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்க இருக்கும் நிலையில் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் 20 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை வியாழக்கிழமை கூடி 24-ம் தேதி முடிய உள்ளது. கரோனா காலத்தில் எம்எல்ஏக்கள் சமூக விலகலைக் கடைபிடித்து அமர வேண்டும், பேரவையை சுத்தம் செய்வது, கிருமிநாசினி தெளிப்பது போன்ற ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரமாக இருந்தனர்.

இதனிடையே சட்டப்பேரவையில் பணியாற்றும் 600 ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 20 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து சபாநாயகர் ஹிர்தே நாராயண் தீட்சித் நிருபர்களிடம் கூறுகையில் “ மிகக்குறுகிய கால மழைக்காலக் கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளது வரும் வியாழக்கிழமை தொடங்கும் கூட்டத்தொடர் 24-ம் தேதி முடிந்துவிடும். அதற்காக சட்டப்பேரவை ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது, இதில் 20 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

எம்எல்ஏக்கள் தங்கும் இடத்துக்கு அருகே கூட்டத் தொடருக்காக தனியாக கரோனா பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் யாருக்கேனும் கரோனா அறிகுறிகள் இருந்தால் அங்கு பரிசோதனை செய்யலாம். பேரவையில் எம்எல்ஏக்கள் இடைவெளி விட்டு அமரும் வகையில் இருக்கை மாற்றப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் அமரும் இடத்தில் கூட இந்த முறை எம்எல்ஏக்களுக்கு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த முறை பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. அதேபோல சட்டப்பேரவையில் இருக்கும் உணவகங்களும் செயல்படாது.

எதிர்க்கட்சியினர் சமூக விலகலைக் கடைபிடிக்காமல் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிடமாட்டார்கள் என நம்புகிறேன். கடும்சமூக விலகல் பேரவையில் கடைபிடிக்கப்படுவதால், எம்எல்ஏக்கள் தங்கள் உதவியாளர்களை பேரவைக்குள் அழைத்துவரக்கூடாது, முன்னாள் எம்எல்ஏக்களும் பேரவைக்கு வரவேண்டாம் எனக் கேட்கிறேன்” எனத் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் கரோனாவில் பாதிக்கப்பட்டு இரு அமைச்சர்கள் உயிரிழந்தனர். கேபினெட் அந்தஸ்து வகித்த கமல் ராணி வருண் என்ற பெண் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சவுகானும் கரோனாவில் பலியானார்கள். இதைத்தொடர்ந்து பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கும் முன் கடுமையாக சுகாதார பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT