சிபிஐ அமைப்பின் முன்னாள் சிறப்பு இயக்குநரும், குஜராத்தைச் சேர்ந்த 1984-ம் ஆண்டு ஐபிஎஸ் கேடர் அதிகாரியான ராகேஷ் அஸ்தானாவை எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைவராக (டிஜி) நியமித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது.
ஏற்கெனவே போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் இயக்குநராகவும் ராகேஷ்அஸ்தானா பதவி வகித்து வந்தார், அந்த பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார். இந்த கூடுதல் பொறுப்பு 2021 ஜூலை 31-ம் தேதி அவர் ஓய்வு பெறும்வரை தொடரந்து கவனிப்பார் என மத்திய பணியாளர் பயிற்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன் சிபிஐ சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா இருந்தபோது, அவருக்கும் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவரும், மொயின் குரேஷி ஊழல் வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்களில் ஒருவருமான தொழிலதிபர் சனா சதீஷ், 2018 அக்டோபர் 4ம் தேதி, இடைத்தரகர்கள் மூலம் அஸ்தானாவுக்கு ரூ .2.95 கோடி லஞ்சம் கொடுத்ததாக அலோக் குமார் குற்றம் சாட்டினார். கடந்த 2018-ம் ஆண்டு அஸ்தானா மீது ஊழல் வழக்கை பதிவு செய்யவும் அலோக் வர்மா உத்தரவிட்டார்.
இரு உயர் அதிகாரிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இருவரையும், மத்தியஊழல் தடுப்பு ஆணையத்தின் உத்தரவின் பெயரில் பதிவியிலிருந்து நீக்கி கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த சூழலில் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து அஸ்தானுக்கு நற்சான்று கிடைத்ததைத் தொடர்ந்து சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பின் இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டார். மேலும், கூடுதலாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் இயக்குநராகவும் அஸ்தானா இருந்து வருகிறார்.
இந்நிலையில் மத்திய பணியாளர் பயிற்சித்துறை வெளியிட்ட அறிவிப்பில், “ எல்லைப் பாதுகாப்புப்படையின் இயக்குநராக ராகேஷ் அஸ்தானா வரும் 2021-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதிவரை அதாவது அவர் ஓய்வு காலம் வரை பதவியில் இருப்பார். கூடுதலாக அவர் போதைப்பொருள் தடுப்புப்பரிவின் இயக்குநராகவும் செயல்படுவார் எனத் தெரிவித்தது.
மேலும், கடந்த 1986-ம் ஆண்டு ஐபிஎஸ் கேடரும் ஆந்திராவைச் சேர்ந்தவருமான கவுமுதி, உள்துறையின் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். உத்தரப்பிரதேச ஐபிஎஸ் கேடர் ஜாவத் அக்தர், சிஆர்பிஎப் இயக்குநர் பொறுப்பிலிருந்து, தீயணைப்புத்துறை இயக்குநராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.