காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சஞ்சய் ஜா. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கிய விவகாரத்தில், கட்சித் தலைமையை வெளிப்படையாக விமர்சித்தார். இதையடுத்து செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து கடந்த மாதம்நீக்கப்பட்ட சஞ்சய் ஜா, கட்சியில்இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ட்விட்டரில் சஞ்சய் ஜா நேற்று வெளியிட்ட பதிவில், “காங்கிரஸ் கட்சி விவகாரங்கள் குறித்து எம்.பி.க்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சுமார் 100 பேர் வேதனை அடைந்துள்ளனர். கட்சித் தலைமை மாற்றம் கோரியும் காரியக் கமிட்டி தேர்தலில் வெளிப்படைத்தன்மை கோரியும் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.
புதிய தலைவரை காங்கிரஸ் கண்டறியத் தவறி விட்டதாக இதற்கு முன்பு சசி தரூர் எம்.பி.யும் மறைந்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித்தும் அண்மையில் விமர்சித்தனர்.
இந்நிலையில், சஞ்சய் ஜா கூறியபடி கடிதம் எதுவும் வரவில்லை என காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. “முகநூல் நிறுவனம் – பாஜக இடையிலான உறவுகள் குறித்த பிரச்சினையை திசை திருப்ப பாஜக உத்தரவின் பேரில் இப்பதிவு வெளியிடப்பட்டுள்ளது” என காங்கிரஸ் கூறியுள்ளது.