மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை மத்திய கல்வித்துறை அமைச்சகம் என்று மாற்றுவதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு ஒப்புதல் அளித்தார் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மத்திய அரசு கடந்த மாதம் வெளியிட்ட புதிய தேசியக் கல்விக்கொள்கையில் முக்கிய பரிந்துரையாக இந்த பெயர் மாற்றம் இருந்தது. இதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது “ மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை மத்திய கல்வித்துறை அமைச்சகம் என்று மாற்றுவதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துவிட்டார். இனிமேல் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்பது மத்திய கல்வித்துறையாக குறிப்பிடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1985-ம் ஆண்டு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது, மத்திய கல்வித்துறை என்பது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ராஜீவ்காந்தி அமைச்சரவையில் முதல் மனிதவளத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சராக பி.வி.நரசிம்மராவ் இருந்தார்.
இதனிடையே பிரதமர் மோடி தலைமையிலான அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவை அமைத்தது. அந்த குழுவின்பரிந்துரையில்தான் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், கல்வித்துறையாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது.
கடந்த 2018-ம் ஆண்டே இந்தப் பெயர்மாற்றம் குறித்து இந்திரா காந்தி தேசிய கலை இயக்க மையத்தின் தலைவர் ராம் பகதூர் ராய், கல்வி குறித்த மாநாட்டில் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.