காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி : கோப்புப்படம் 
இந்தியா

உ.பியில் நடக்கும் காட்டாட்சியில் சாதி வன்முறையும் ;பலாத்கார சம்பவங்களும் உச்சம்:  ராகுல், பிரியங்கா காந்தி விமர்சனம்

பிடிஐ

உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் காட்டாச்சியில் சாதி ரீதியிலான வன்முறைகளும், பெண்களுக்கு எதிரான பலாத்கார சம்பவங்களும் உச்சத்தை அடைந்துள்ளன என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் ஆசம்கார்க் மாவட்டத்தில் தார்வார் பகுதியில் உள்ள பாஸ்கான் கிராமத்தின் தலைவர் சத்யமேவ்(வயது42). தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த சத்யமேவை கடந்த வெள்ளிக்கிழமை பைக்கில் வந்த 3 பேர் சுட்டுக் கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஆசம்கார்க் மாவட்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலை வழக்கு தொடார்பாக 4 பேரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வன்முறைச் சம்பவத்தை நாளேடுகளில் வந்திருப்பதைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசத்தில் ஆளும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி ட்விட்டரில் இந்தியில் பதிவிட்ட கருத்தில் “ உத்தரப்பிரதசேத்தில் நடக்கும் காட்டாட்சியில் சாதிரீதியிலான வன்முறைகளும், பெண்களுக்கு எதிரான பலாத்காரக் குற்றங்களும் உச்சத்தில் இருக்கின்றன. மற்றொரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.

தாழ்த்தப்பட்டோர் என்பதற்காக கிராமத்தின் தலைவர் சத்யமேவ் கொல்லப்பட்டுள்ளார். வேறு எந்தகாரணமில்லை, ஏனென்றால் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். சத்யமேவ் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தனது முகநூல் பக்கத்தில் உத்தரப்பிரதேசத்தில்ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள கருத்தில் “ புலந்ஷெர், ஹபூர், லட்சுமிபூர் கேரி, கோரக்பூர் ஆகிய நகரங்களில் எல்லாம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைப் பார்க்கும் போது, ஆளும் அரசு பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தோல்வி அடைந்துவிட்டதையே காட்டுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிரிமினல்கள் மனதில் சட்டம் பற்றிய அச்சம் இல்லை. இதன் விளைவாகத்தான் பெண்களுக்கு எதிராக கொடூரமான குற்றங்கள் நடக்கின்றன. போலீஸாரும், அரசு நிர்வாகிகளும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை, பெண்களுக்கு பாதுகாப்பும் வழங்கவில்லை. சட்டம் ஒழுங்கு முறையை உத்தரப்பிரதேச அரசு மறுஆய்வு செய்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT