இந்தியாவில் கரோனா பரிசோதனையின் எண்ணிக்கை 3 கோடியைக் கடந்துள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஞயாற்றுக்கிழமை வரை 3 கோடியை 41 ஆயிரத்து 400 மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது, நேற்று மட்டும் 7 லட்சத்து 31 ஆயிரத்து 697 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ள என்று ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர் இன்று காலை ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
சரியான நேரத்தில், பரிசோதனையின் அளவை தீவிரப்படுத்தியதால், பரிசோதனை எண்ணிக்கை 3 கோடியைக் கடந்துள்ளது. கடந்த ஜூலை 6-ம் தேதி பரிசோதனை அளவு ஒரு கோடியை எட்டிய நிலையில், கடந்த 2-ம் தேதி 2 கோடியை எட்டியது. அடுத்த 15 நாட்களில் அடுத்த ஒருகோடியை பரிசோதனை அளவு எட்டியுள்ளது.
கரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியபோது தேசிய வைரலாஜி நிறுவனத்தில் மட்டும் ஒருகரோனா ஆய்வகம் மட்டுமே இருந்தது. அதன்பின் லாக் டவுன் காலத்தில் 100 ஆய்கவகங்களாக அதிகரி்க்கப்பட்டன. கடந்த ஜூன் 23-ம் தேதி நிலவரப்படி ஆயிரம் கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.
தற்போது ஒட்டுமொத்தமாக 1,470 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் நாட்டில் செயல்பட்டுட வருகின்றன. இதில் அரசு சார்பில் 960 ஆய்வகங்களும், தனியார் துறை சார்பில் 501 ஆய்வகங்களும் செயல்பட்டு வருகின்றன.
இவ்வாறு ஐசிஎம்ஆர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.