காஷ்மீர் எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் 2 முறை தாக்குதல் நடத்தியது. இதில் வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதன்மூலம் கடந்த 5 நாட்களில் 6 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக தாக்குதல் நடத்தி இந்திய ராணுவ வீரர்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். ஆனால், இந்திய ராணுவ வீரர்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு ஊடுருவலை முறியடிப்பதுடன், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
எனினும் செப்டம்பர் மாதம், முதல் தேதியில் இருந்து சனிக்கிழமை வரை 5 நாட்களில் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் 6 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே கிருஷ்ணா காட் என்ற இடத்தில் நேற்று காலை 7.45 மணிக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். உஷாரடைந்த இந்திய வீரர்கள் திருப்பி பலமாக தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் இந்திய வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார் என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அதேபோல் நேற்றுமுன்தினம் இரவு பூஞ்ச் மாவட்டம், ஹமீர்புர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
கடந்த ஆகஸ்ட் மாதமும் இதேபோல் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள் பலியாயினர். 30-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 57 முறை பாகிஸ்தான் அத்துமீறி உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 250 முறை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.