ஆந்திர மாநிலத்தில் 3 தலைநகரங்கள் அமையவிருப்பதால் மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி பெறும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.
ஆந்திர அரசு சார்பில் விஜயவாடாவில் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தேசியக்கொடியை ஏற்றிவைத்து, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தேசப் பக்தி கொண்டிருப்பது அவசியம். நமது அரசியல் சாசனம் மற்றும் சட்டத்துக்கு உட்பட்டு நாம் வாழ வேண்டும். மாநிலத்தின் அனைத்து பிரிவினரும் சமமான வளர்ச்சி பெறவேண்டும். தலித்துகள், பின்தங்கிய வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினருக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாநிலத்தில் 30 லட்சம் ஏழைகளுக்கு மானிய விலை வீடுகள் வழங்கி வருகிறோம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ரைத்து பரோசா எனும் முதலீட்டு திட்டம் போன்ற பல திட்டங்களை அமல்படுத்தியுள்ளோம். பிள்ளைகள் அனைவரும் ஆங்கில வழிக்கல்வி கற்க அரசு விரும்புகிறது. ஆனால் மொழிப் பெயரை கூறி இதனை சிலர் தடுக்கின்றனர்.
மாநிலப் பிரிவினையால் நாம்தான் அதிக நஷ்டம் அடைந்துள்ளோம். இதிலிருந்து நாம் மீள்வதற்கு மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி பெறவேண்டும் இதற்கு 3 தலைநகரங்கள் அமைய வேண்டும். விரைவில் விசாகப்பட்டினத்தில் இருந்து ஆட்சி நடத்தப்படும்.
கர்னூலில் உயர் நீதிமன்றமும், அமராவதியில் சட்டமன்றமும் செயல்படும். அனைத்து பிரிவினரும் அவரவர் வாழ்வில் உயர வேண்டும் என்பதே அரசின் தலையாய லட்சியம் ஆகும்” என்றார்.
விழாவில் பல்வேறு துறைகளின் சாதனைகளை பறைசாற்றும் வகையில் வாகன அணிவகுப்பு நடைபெற்றது. தியாகிகள் மற்றும் சிறந்த அரசு ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.