கோப்புப்படம் 
இந்தியா

‘வந்தே பாரத் மிஷன்’ மூலம் 10.50 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்

பிடிஐ

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் வந்தே பாரத் மிஷன் மூலம் இதுவரை 10.50 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் வந்துள்ளார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் லாக்டவுனால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை விமானம் மூலம் அழைத்துவர வந்தேபாரத் மிஷன் திட்டத்தை செயல்படுத்தியது மத்திய அரசு.

இதுவரை 4 கட்ட வந்தேபாரத் மிஷன் முடிந்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், தெற்காசிய நாடுகளில் இருந்த இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இது தவிர கடல்மார்க்கமாக சமுத்திர சேது திட்டமும் செயல்படுத்தப்பட்டு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் 3 கட்ட வந்தே பாரத் மிஷன் முடிந்து 5-வது கட்டம் நடந்துவரும் நிலையில் இதுவரை 10.50 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் வந்துள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர வந்தேபாரத் மிஷன் கடந்த மே 7-ம் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இதுவரை 4 கட்ட வந்தேபாரத் மிஷன் முடிந்துள்ளது.

5-வது வந்தேபாரத் மிஷன் கடந்த 1-ம் தேதி முதல் 12-ம் தேதிவரை நடந்து வருகிறது. இதில் 300 சர்வதேச விமானங்கள், 70 உள்நாட்டு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த மாதத்தில் மட்டும் 500 சர்வதேச விமானங்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த 11-ம் தேதியுடன் வந்தேபாரத் மிஷன் மூலம் வெளிநாடுகளில் இருந்து தாயகம் அழைத்துவரப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது. இதுவரை 10.50 லட்சம் இந்தியர்கள் தாயகம் வந்துள்ளனர்.

இந்த 5-வது வந்தேபாரத் மிஷனில் ஆர்மீனியா, வங்கதேசம்,ஜப்பான், இஸ்ரேல், நியூஸிலாந்து, பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து, உக்ரைன் ஆகிய நாடுகளில் இருந்தும் அழைத்துவரப்பட உள்ளனர். மேலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் ஏற்கெனவே அதிகமான விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

அனுராக் ஸ்ரீவஸ்தவா

இதுதவிர சில கட்டுப்பாடுகளுடன் விமானங்களை இயக்குவதறக்காக அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் பேசி முடிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நம்முடைய அண்டை நாடுகளுக்கும் இதேபோன்று கட்டுப்பாடுகளுடன் விமானங்களை இயக்க விரைவில் நடவடிக்கை தொடங்கும்.

ஆனால்,துரதிருஷ்டவசமாக கடந்த 7-ம் தேதி கோழிக்கோட்டில் துபாயிலிருந்து வந்த விமானம் விபத்துக்குள்ளானது. ஆனால் உடனடியாக வெளியுறவுத்துறை சார்பில் 24 மணிநேரமும் இயங்கும் உதவி எண்கள் தரப்பட்டு, தேவையான தகவல்கள் பாதிக்கப்பட்டவர்ளின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டன. 10-ம் தேதிவரை கட்டுப்பாட்டு அறையும் செயல்பட்டது.

கடந்த 8-ம் தேதி முதல் ஏர் சுவிதா எனும் ஆன்லைன் இணையதளத்தை விமானப்போக்குவரத்து அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்குள் வரும் இந்தியர்கள் தனிமைப்படுத்தும் முகாமுக்குச் செல்லாமல் விலக்குப் பெறலாம்.

இவ்வாறு ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT