உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும், நீதித்துறையையும் அவமதிக்கும் வகையில் சர்ச்சைகுரிய ட்விட் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது.
பிரசாந்த் பூஷன் மீதான தண்டனை விவரங்கள் குறித்து வரும் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்தனர்.
கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிட்ஸன் பைக்கில் அமர்ந்தவாறு ஒரு புகைப்படம் எடுத்திருந்தார். அந்தப் படம் குறித்து பிரசாந்த் பூஷண் விமர்சித்து, முகக்கவசம், ஹெல்மெட் இல்லாமல் அமர்ந்த தலைமை நீதிபதி என்று விமர்சித்தார்.
ஆனால், உண்மையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அந்த பைக்கை இயக்கவில்லை, நின்றிருந்த அந்தபைக்கில் அமர்ந்து மட்டுமே பார்த்தார், அமரும் வரை முகக்கவசம் அணிந்திருந்தார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது மட்டுமல்லாமல் நீதித்துறை குறித்தும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்திருந்தார்.
இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.காவே, கிருஷ்ணா முராரே ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் விளக்கம் அளிக்கக் கோரி கடந்த மாதம் 22-ம் தேதி பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அளித்த விளக்கத்தில் " தான் பதிவிட்ட ட்விட்களுக்கு மன்னிப்பு கோர மறுத்துவிட்டார். தலைமை நீதிபதி போப்டே நின்றிருந்த பைக்கில்அமர்ந்திருந்தார் என்பதை கவனிக்கவில்லை என்பதால் அதற்கு மட்டும் வருத்தம் கேட்கிறேன். ஆனால், மற்றொரு ட்விட் என்பது பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கு உட்பட்டது என்று தெரிவித்தார். இந்த ட்விட்டர் கருத்து எந்த நீதிபதிக்கும் எதிரானது அல்லது, அவர்களின் நடத்தை பற்றியதுதான், அது நீதிமன்ற நிர்வாகத்தை பற்றியது அல்ல என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிடுகையிலும்,” பிரசாந்த் பூஷண் பதிவிட்ட இரு ட்விட்களும் நீதிமன்றத்துக்கு எதிரானது அல்ல” எனத் தெரிவித்திருந்தார்
இதையடுத்து, இந்தவழக்கை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கடந்த 5-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.காவே, கிருஷ்ணா முராரே ஆகியோர் அமர்வு இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை வரும் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு குறைந்தபட்சமாக 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.2 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.