நாட்டின் 2-வது விவசாயி ரயில்(கிசான் ரயில்) பிஹாரின் பரூனி நகரிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் டாடாநகருக்கு பால் டேங்கர்கள், காய்கறிகளுடன் நேற்று புறப்பட்டது.
நாட்டின் முதல் விவசாயி ரயில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் மகாராஷ்டிராவிலிருந்து பிஹாருக்கு இயக்கப்பட்ட நிலையில் 2-வது ரயில் போக்குவரத்து நேற்று தொடங்கியது.
விவசாயிகளின் நலனுக்காகவும், வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்ல பிரத்யேகமாக தனி ரயில் விடப்படும் என்று நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். எளிதில் அழுகும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்ற வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்ல கிசான் ரயில் (விவசாயி ரயில்) இயக்க ரயில்வே முடிவு செய்தது.
இதன்படி மகாராஷ்டிாவின் நாசிக் மாவட்டம், தேவ்லாலி நகரிலிருந்து கடந்த 7-ம் தேதி பிஹார் மாநிலம் தனாபூருக்கு கிசான் ரயில் புறப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிஹாரின் தனாபூரிலிருந்து முசாபர்பூர் வரை ரயில் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் 2-வது விவசாயி ரயில் பிஹாரின் பரூனி நகரிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் டாடாநகருக்கு நேற்று பால்டேங்கர்களுடன் புறப்பட்டது. பொகாரா நகரம், ஹாதியா, டாடாநகர் ஆகியவற்றுக்கு பால் சப்ளை செய்ய இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஒருநாள் விட்டு ஒருநாள் இரு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் “ விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க கிசான் ரயில் நிச்சயம் உதவும். உள்ளூர் விவசாயிகள், வர்த்தகர்கள் ஆகியோரின் உதவியுடன் விவசாயிகளுக்கு அதிகபட்ச லாபம் கிடைக்க மத்திய ரயில்வே தொடர்ந்து சந்தைப்படுத்தும் பணியைச் செய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.