இந்தியா

கேரள கன்னியாஸ்திரி வழக்கு: முன்னாள் பாதிரியார் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு

செய்திப்பிரிவு

கேரளாவில் கோட்டயம் மாவட்டம் குருவிளங்காடு காவல் நிலையத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்தார். "பஞ்சாபில் பணியாற்றிய பேராயர் பிராங்கோ மூலக்கல், கேரளாவில் இருந்தபோது 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்" என கூறியிருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் கேரள போலீஸார் பிராங்கோவை கைது செய்தனர். கோட்டயம் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு நடந்து வருகிறது. அவருக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி பிராங்கோ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்ததுடன் வழக்கை அவர் சந்திக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக கோட்டயத்தில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பிராங்கோ மீது நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. விசாரணையின்போது பிராங்கோ ஆஜரானார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி படித்தார். பின்னர் இந்த வழக்கு மீதான விசாரணையை செப்டம்பர் 16-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT