இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்தை நெருங்குகிறது. அதேபோல குணமடைந்தோர் எண்ணிக்கையும் 17 லட்சத்தை எட்டுகிறது என்று மத்திய சுகாதாரத்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றால் 66 ஆயிரத்து 999 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 23 லட்சத்து 96 ஆயிரத்து 637 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து 6-வது நாளாக நாள்தோறும் 60 ஆயிரத்துக்கு மேல் கரோனாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 7-ம் தேதி 20 லட்சம் பாதிப்பை எட்டிய நிலையில் அடுத்த ஒருவாரத்துக்குள் 4 லட்சத்தைக் கடக்க உள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்குகிறது. இதுவரை 16 லட்சத்து 95 ஆயிரத்து 982 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர். கரோாவிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 70.77 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 942 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 47 ஆயிரத்து 33 ஆக அதிகரித்துள்ளது. கரோனா உயிரிழப்பு சதவீதம் 1.96 ஆகக் குறைந்துள்ளது.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, ஆகஸ்ட் 12-ம் தேதிவரை 2 கோடியே 68 லட்சத்து 45 ஆயிரத்து 688 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவாக புதன்கிழமை மட்டும் 8 லட்சத்து 30 ஆயிரத்து 391 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் கரோனாவில் 942 பேர் உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 344 பேரும், தமிழகத்தில் 119 பேரும் உயிரிழந்தனர்.
அடுத்ததாக கர்நாடகாவில் 112 பேர், ஆந்திராவில் 93 பேர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கத்தில் தலா 54 பேர், பஞ்சாப்பில் 39 பேர், குஜராத்தில் 18 பேர், மத்தியப் பிரதேசத்தில் 15 பேர், டெல்லியில் 14 பேர், தெலங்கானா, ராஜஸ்தானில் தலா 11 பேர் உயிரிழந்தனர்.
ஒடிசாவில் 9 பேர், ஜம்மு காஷ்மீரில் 8 பேர், அசாம், கேரளாவில் தலா 6 பேர், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், புதுச்சேரியில் தலா 5 பேர், உத்தரகாண்டில் 4 பேர், பிஹார்,கோவா, ஹரியாணாவில் தலா 3 பேர், திரிபுராவில் ஒருவர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 344 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 18 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 820 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 119 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5,278 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 52 ஆயிரத்து 929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் 10 ஆயிரத்து 946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,153 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் 14 ஆயிரத்து 154 பேர் சிகிச்சையில் உள்ளனர். 18 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,713 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 80,351 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 112 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 3,510 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் 13,096 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.