பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விஷ்வ இந்து பரிஷத்தின் (விஎச்பி) மறைந்த முன்னாள் தலைவர் அசோக் சிங்காலுக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்த சாதுக்கள் சபை முடிவு செய்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை போடப்பட்டதை அடுத்து அதன் முக்கியத்துவம் மீதான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
இதை பொதுமக்கள் முன்பாக இந்துத்துவா அமைப்புகளும், பல்வேறு மடங்கள் மற்றும் அஹாடாக்களின் (இந்து சம்பிரதாய அமைப்புகள்) சாதுக்களும் எடுத்துரைக்க தொடங்கி உள்ளனர். இந்த வகையில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கான முக்கியக் காரணகர்த்தாக்களாக பிரதமர் நரேந்திர மோடியும், மறைந்த விஎச்பி தலைவர் அசோக் சிங்காலும் கருதப்படுகின்றனர்.
எனவே இந்த இருவருக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அகில இந்திய அஹாடா பரிஷத் அமைப்பினர் வலியுறுத்தத் தொடங்கி உள்ளனர். இதற்காக அவர்களது அடுத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளனர். இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும் அனுப்ப உள்ளனர்.
இதுகுறித்து அஹாடா பரிஷத்தின் தலைவரான மஹந்த் நரேந்திர கிரி கூறும்போது, "மறைந்த அசோக் சிங்கால் ராமர் கோயிலுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இதற்காக அனைத்து சாதுக்களாலும் மதிக்கப்பட்டவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கவுரவிக்க வேண்டும். அதேபோல, பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்த விருது வழங்கப்பட வேண்டும்' என்றார்.
நாட்டின் முக்கிய 13 அஹாடாக்களின் தலைமை அமைப்பாக இருப்பது அகில இந்திய அஹாடா பரிஷத். இதன் முடிவுகள் இந்து அமைப்பினரால் அதிகம் மதிக்கப்படுகிறது. பாரத ரத்னா விருதுக்கான அஹாடா பரிஷத்தின் கருத்தை உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவும் வரவேற்றுள்ளார். இவர் விஎச்பியில் இருந்தபோது, ராமர் கோயிலுக்கான போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர்.
கடந்த ஆகஸ்ட் 5-ல் நடைபெற்ற ராமர் கோயிலுக்கானப் பூமி பூஜையில் அசோக் சிங்காலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அவரது நினைவாக அசோக் சிங்கால் சகோதரரின் மூத்த மகன் சலீல் அவரது மனைவி மது சிங்காலுடன் அழைக்கப்பட்டிருந்தார். இவர் ராஜஸ்தானின் உதய்பூரில் தொழிலதிபராக உள்ளார். சலீல் தம்பதி பூமி பூஜைக்கான அக்னி ஹோமத்திலும் பிரதமர் மோடியுடன் சேர்ந்து முக்கிய இடத்தில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.