இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்து இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கூறிய கருத்தை மேற்கோள்காட்டி, பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று முன்தினம் நடைபெற்ற கருத்தரங்கில் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர், கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவித்தார். இந்த நிலை தொடர்ந்தால் நாடு சுதந்திரமடைந்தபோது இருந்த ஜிடிபி அளவுக்கு இந்தியா வந்துவிடும் எனவும் அவர் கூறினார்.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் நேற்று ஒரு பதிவை வெளிட்டார். அதில், நாராயண மூர்த்தி கூறிய கருத்து ஒரு பக்கத்திலும் அதனருகே, பாஜகவின் கடந்த மக்களவைத் தேர்தல் கோஷமான 'மோடி இருந்தால் அனைத்தும் சாத்தியமே' என்ற வாக்கியமும் பொறிக்கப்பட்டிருந்தன. மோடி அரசை கிண்டல் செய்யும் விதமாக ராகுல் இந்தப் பதிவை வெளியிட்டிருக்கிறார்.