மத்திய ஆயுஷ் அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையமைச்சரான ஸ்ரீபாட் ஒய்.நாயக் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவரே ட்விட்டர் பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார்.
பாஜக தரப்பில் ஏற்கெனவே மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோர் கரோனாவில் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளார்.
இவர் தவிர உ.பி. மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திரநாத் சிங், , மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, அர்ஜுன் ராம் மேக்வால், கைலாஷ் சவுத்ரி,தர்மேந்திர பிரதான், ஆகியோரும் கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆயுஷ் அமைச்சகம்,பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையமைச்சரான ஸ்ரீபாட் ஒய் நாயக் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் அவரின் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது “ நான் இன்று கரோனா பரிசோதனை செய்து கொண்டதில் எனக்கு அறிகுறி இல்லாத கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது உடல்நிலை சீராக இருக்கிறது. மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டில் என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டேன்.
என்னுடன் கடந்த சில நாட்களாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கோவா மாநிலத்திலிருந்து எம்.பி.யாகத்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீபாட் நாயக், சமீபத்தில் வடக்கு கோவாவில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். கடந்த இரு நாட்களுக்கு முன் அங்கு நடந்த, விநாயகர் சதுர்த்திக்கான விழாவுக்கான ஆடியோ சிடி மற்றும் நூலையும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.