புல்வாமா மாவட்டம் கம்ராசிபுரா கிராமத்தில் தேடுதலில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர் : படம் ஏஎன்ஐ 
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் உயிரிழப்பு

பிடிஐ


ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று நடந்த தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார், மற்றொரு வீரர் படுகாயமடைந்தார் என பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா மாவட்டம், கம்ராசிபுரா கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை அந்த கிராமத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரு வீரர்கள் பலத்த காயமடைந்தனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து திருப்பிச் சுட்டனர்.

காயமடைந்த இரு பாதுகாப்புப்படை வீரர்களும்உடனடியாக ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒரு வீரர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார், மற்றொரு வீரர் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அந்த தீவிரவாதியிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி, கையெறி குண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தீவிரவாதி எந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்பது இன்னும் தெரியவில்லை. தொடர்ந்து தேடுதல் நடந்து வருகிறது என்று பாதுகாப்புப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT