பெங்களூருவில் உள்ள புலிகேசி நகரை கும்பல் ஒன்று நேற்று இரவு சூறையாடியது., போலீஸ் நிலையம், காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தி வீடு ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்தை அடுத்து பேஸ்புக் போஸ்ட் பகிர்ந்த எம்.எல்.ஏ.உறவினர் நவீன் உட்பட 110 பேரை போலீசார் கைது செய்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் டிஜே ஹள்ளி, கேஜி ஹள்ளி ஆகிய இரு இடங்களில் 144 தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
காரணம் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் தங்கை மகன் நவீன் (23), முகநூலில் ஒரு மதத்தினரைப் புண்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய வகையிலான பதிவு ஒன்றை பகிர்ந்திருந்ததே. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்த வன்முறையில் 2 பேர் பலியாக 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீஸார் 60 பேர் காயமடைந்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நவீனின் போஸ்ட்டைத் தொடர்ந்து ஆத்திரத்துடன் புலிகேசி நகர் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் வீட்டருகே கூடிய கும்பல் வீட்டுக்குள் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியது. கற்களை வீசி ஜன்னல்கள், கதவுகளை உடைத்தனர்.
இதனையடுத்து எம்.எல்.ஏ.வும் நவீனும் அருகில் உள்ள காவல்நிலையத்துக்குத் தப்பிச் சென்றதாக தகவல் பரவ வன்முறைக் கும்பல் அப்படியே காவல்நிலையம் நோக்கிச் சென்றது. காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்துக்கு தீ வைத்தது. கும்பலைக் கட்டுப்படுத்த போலீஸார்களும் காயமடைந்தனர்.
எம்.எல்.ஏ. உறவினர் நவீனுக்கு எதிராக புகார் அளிக்க சிலர் காவல்நிலையம் சென்றதாகவும் அங்கு போலீஸார் உங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளவும் என்று கூறியதாகவும் இதனால் அவர்கள் ஆத்திரமடைந்ததாகவும் தெரிகிறது.
அதாவது சத்பாவனா இளைஞர் சமூக நல அமைப்பும், பிலால் மற்றும் பிற மசூதியைச் சேர்ந்த சிலரும் எம்.எல்.ஏ. உறவினர் நவீனுக்கு எதிராக டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் கடும் வன்முறை வெடித்ததால் கர்நாடக முதல்வர் பிஎஸ்.எடியூரப்பா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையுடன் பேசி வன்முறையை அடக்குமாறு உத்தரவிட்டார்.
வன்முறையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். காரணம் கமிஷனர் கமல் பந்த் சம்பவ இடத்துக்கு வந்தும் கூட வன்முறை அடங்கவில்லை. முதலில் தடியடி, பிறகு கண்ணீர்ப்புகை அதன் பிறகுதான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பெங்களூரு போலீஸ் தெரிவித்துள்ளது.
பிற்பாடு எம்.எல்.ஏ.சீனிவாச மூர்த்தி, “முஸ்லிம் நண்பர்களே, யாரோ செய்த தவறுக்கு நாம் சண்டையிட வேண்டாம். என்ன சண்டையிட்டாலும் நாம் சகோதரர்கள். யார் தவறு செய்தார்களோ அவர்களுக்கு நாம் சட்டத்தின் துணையுடன் பாடம் புகட்டுவோம். நாங்களும் உங்கள் பக்கம்தான் இருக்கிறோம். எனவே முஸ்லிம் சகோதரர்கள் அமைதி காக்க வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.