திமுக எம்.பி. கனிமொழி : கோப்புப்படம் 
இந்தியா

'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம் மொழி குறித்து சிஐஎஸ்எப் அதிகாரி கேட்டது தொடர்பாக பாஜக தலைவர் சந்தோஷ் விமர்சனம்

பிடிஐ

திமுக எம்.பி. கனிமொழி நேற்று டெல்லி சென்ற போது, சென்னை விமானநிலையத்தில் சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் அவரிடம் மொழி குறித்து கேள்வி எழுப்பிய விவகாரத்தில் பாஜக தலைவர் பிஎல் சந்தோஷ் "தமிழகத்தில் தேர்தல் பிர்சசாரம் தொடங்கிவிட்டது" என்று விமர்சித்துள்ளார்.

டெல்லியில் நடைபெறும் உரம் மற்றும் ரசாயனம் மற்றும் தனிநபர்களின் விவரங்கள் குறித்த பாதுகாப்பு மசோதா குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுக்கூட்டத்தில் பங்கேற்க திமுக எம்.பி. கனிமொழி நேற்று சென்னையில் இருந்து டெல்லி சென்றார்.

அப்போது சென்னை விமானநிலையத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை திமுக எம்.பி. கனிமொழி ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.

அதில் “ சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எப் பெண் அதிகாரி ஒருவர் என்னிடம் கேள்வி எழுப்பினார். எனக்கு இந்தி தெரியாது, ஆதலால், ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள் என்றேன். அதற்கு அந்த அதிகாரி நீங்கள் இந்தியரா என்று கேட்டார். இந்தியனாக இருக்க இந்தி அறிந்திருக்க வேண்டும் என்று எப்போது இருந்து இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். மேலும், #இந்திஇம்போசிஷன் என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியிருந்தார்.

திமுக எம்.பி. கனிமொழி இந்த விவகாரத்தை ட்விட்டரில் பதிவிட்டதும் சிஐஎஸ்எப் அதிகாரிகள் அவரிடம் விளக்கம் அளித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிஐஎஸ்எப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “ சிஐஎஸ்எப் வணக்கத்தை தெரிவிக்கிறது. உங்களுக்கு நேர்ந்த அசவுகரியக் குறைவான அனுபவத்தை அறிந்தோம். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சிஐஎஸ்எப் அதிகாரிகள் யாரும் பயணிகளிடம் மொழி குறித்துக் கேட்பதில்லை” எனத் தெரிவித்தனர்.

பாஜக தலைவர் பிஎல். சந்தோஷ்

இந்த விவகாரத்தை பாஜக மூத்த தலைவர் பிஎல் சந்தோஷ் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “ தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 8 மாதங்கள்தான் இருக்கிறது. இப்போது இருந்தே தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது” எனத் தெரிவித்திருந்தார்

இதற்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் , சந்தோஷ்க்கு பதிலடி கொடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவி்ட்டுள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில் “ இந்த ஆணவத்துக்கு உயர்ந்த விலைக்கொடுக்கப்போகிறீர் சந்தோஷ். சிஐஎஸ்எப் அதிகாரி தவறு செய்யும் போது, அவர்கள் தவறை ஏற்றுக்கொள்ளும்போது, ஏன் பாஜக திமுக இடையிலான பிரச்சினையாக்கப் பார்க்கிறார்கள். பெங்களூரு விமானநிலையத்தில் உங்களை யாரேனும் நீங்கள் இந்தியரா எனக் கேட்டிருந்தால் என்ன செய்வீர்கள்.” எனத் தெரிவித்தார்.

இதற்கு பாஜக தலைவர் சந்தோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளிக்கையில் “ நன்றி வணக்கம். கனிமொழி எம்.பியிடம் விவரங்களை சிஐஎஸ்எப் கேட்டுள்ளது. அவரும் விவரங்களை வழங்கியுள்ளார். நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நேரத்தில் ஆணவத்தைப் பற்றி விவாதிக்கலாம்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT