இந்தியா

5 ஆண்டுக்கு முன்பு திருடிய வீட்டில் மீண்டும் திருட முயன்ற 2 பேர் கைது

செய்திப்பிரிவு

புனே நகரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருடிய அதே வீட்டில் மீண்டும் திருட முயன்ற 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள டெக்கான் ஜிம்கானா காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புனே நகரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் கடந்த ஜூலை 30-ம் தேதி கத்தியுடன் கொள்ளையடிப்பதற்காக நுழைய முயன்ற 2 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கடந்த 2015-ம் ஆண்டு அதே வீட்டில் ரூ.50 லட்சம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. திருடிய பணத்தில் சோம்நாத் பன்சோட் என்பவர் ரூ.22 லட்சத்தை எடுத்துக் கொண்டுள்ளார். அதில் ஒரு படுக்கையறை கொண்ட குடியிருப்பை வாங்கியுள்ளார். மற்றொரு நபரான சுதாகர் ரூ.28 லட்சத்தை எடுத்துக் கொண்டு, அதில் வீடு, கார் மற்றும் இருசக்கர வாகனம் வாங்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சொத்துகளின் மதிப்பு ரூ.62.95 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. இதை பறிமுதல் செய்துள்ளோம். அதேநேரம், ரூ.50 லட்சம் திருடு போனபோதிலும் ரூ.4 லட்சம் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் புகார் கொடுத்தார். தனது மனைவி அதிர்ச்சி அடையக்கூடாது என்பதற்காகவே அவர் குறைவான பணம் திருடு போனதாகக் கூறியது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT