டெல்லி சுற்றுவட்டாரத்தில் இயங்கி வரும் கால் சென்டர் ஒன்று, அமெரிக்காவைச் சேர்ந்த ஏராளமானோரை இணைய வழியில் ஏமாற்றி மோசடி செய்து வருவதாக, அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான எப்பிஐ மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக டெல்லி சிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, டெல்லி அருகே குருகிராமில் உள்ள சோஹ்னா சாலையில் இந்த போலி கால் சென்டர் செயல்படுவது தெரிந்தது. அங்கு விரைந்து சென்ற சிஐடி போலீஸார், கால் சென்டர் நடத்திய விக்ரம் வர்மா மற்றும் ரிஷப் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு டெல்லியில் போலி கால் சென்டரை நடத்தியதாக இவர்கள் கைது செய்யப்பட்டதும், தற்போது ஜாமீனில் வெளியே வந்து அதே மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.