காங்கிரஸுக்கு முழுநேர தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும் என மூத்த தலைவர் சசிதரூர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.
ஆனால் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்தது
இதையடுத்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்று நாளையோடு ஓராண்டு நிறைவடைகிறது. ஆனால் இன்னும் முழு நேர தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் ராகுல் காந்தி மீண்டும் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் தொடர்ந்து வெளிப்படையாக வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் ராகுல் காந்தியோ மவுனம் காத்து வருகிறார். இந்தநிலையில் காங்கிரஸூக்கு முழுநேர தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும் என மூத்த தலைவர் சசிதரூர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நமது கட்சி தலைமை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என விரும்புகிறேன். கடந்த ஆண்டு சோனியா காந்தி இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்டபோது நானும் வரவேற்றேன். ஆனால் அவர் நீண்டகாலம் சுமையை சுமக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பது நியாயமானது அல்ல. நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.