இந்தியா

கேரள நிலச்சரிவு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு: தொடர்ந்து வெளுத்து வாங்கும் கனமழை

செய்திப்பிரிவு

கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே மாநிலம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல இடங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்துவருகிறது. குறிப்பாக இடுக்கி, பத்தனம்திட்டா, வயநாடு போன்ற பகுதிகளில் கனமழை விடாது பெய்து வருகிறது.

மூணாறு கிராமப் பஞ்சாயத்திலிருந்து 28 கி.மீ. தொலைவில் ராஜமலை செல்லும் பகுதியில் பெட்டிமடா பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தற்காலிகக் குடியிருப்பு அமைத்து 80-க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர்.

நேமக்கடா பகுதியில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்த 20 வீடுகளும் மண்ணில் புதைந்தன. மீட்புப்பணியில் தீயணைப்பு படையினர், போலீஸார், பேரிடர் மீட்புப்படையினர் வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நிலச்சரிவு நடந்த பகுதியில் கனமழை பெய்ததாலும், மீட்பு வாகனங்கள் செல்லமுடியாததாலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

பாறைகளும், மண்ணும் சேர்ந்து 20 வீடுகளையும் மூடின. இதனால் மண் அள்ளும் எந்திரமும் மீட்புப்பணியில் ஈடுபடுவதில் சி்க்கல் நீடிக்கிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. நேற்றுவரை 26 உடல்களை பேரிடர் மீட்புப்படையினர் மீட்ட நிலையில் இன்று புதையுண்ட பகுதியில் இருந்து அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இன்று மட்டும் இதுவரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மொத்தம் 42 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனை இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷ் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே மாநிலம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல இடங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோட்டயம் விளையாட்டரங்கம்

மாநிலத்தின் பல பகுதிகளிலும் அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் கூடுதல் நீர் ஆறுகளில் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் பல இடங்களில் ஊருகளுக்குள் வெள்ள நீர் புகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT