காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : கோப்புப்படம் 
இந்தியா

‘எந்த இறக்குமதித் தடையும் தனக்குத்தானே விதித்துக்கொள்ளும் தடை’: ராஜ்நாத் சிங் அறிவிப்புக்கு ப.சிதம்பரம் விமர்சனம்

பிடிஐ

எந்தவிதமான இறக்குமதித் தடையும் தனக்குத்தானே விதித்துக்கொள்ளும் தடை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில், “ தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் சில முடிவுகளை எடுத்துள்ளது.

அதன்படி, உள்நாட்டு உற்பத்தியை, தொழிலை ஊக்குவிக்கும் வகையில் 101 வகையான பாதுகாப்புத் தளவாடங்களை வரும் 2024-ம் ஆண்டுக்குள் இறக்குமதி செய்வது படிப்படியாக நிறுத்தப்படும்.
இதன் மூலம் அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.


இந்த அறிவிப்பை விமர்சித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

அவர் பதிவிட்ட கருத்தில், “பாதுகாப்புத் துறை அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை காலையில் மிகப்பெரிய குரலில் உறுதியளித்துள்ளார். இது கடைசியில் வேதனையில் முடியப்போகிறது.

பாதுகாப்புத் தளவாடங்களைப் பாதுகாப்புத் துறை அமைச்சகம்தான் இறக்குமதி செய்கிறது. எந்த இறக்குமதித் தடையும் தனக்குத்தானே விதித்துக்கொள்ளும் தடையாகும்.

பாதுகாப்புத் துறை அமைச்சரின் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு என்பது தனது செயலாளர்கள், அலுவலகத்துக்கு மட்டும் விடுத்த அறிவிப்பாகும்.

இறக்குமதித் தடை என்பது உரத்த குரலின் வார்த்தை ஜாலம். இதன் அர்த்தம் என்னவென்றால், (இன்று நாம் இறக்குமதி செய்வோம்) அதே பொருட்களை நாம் 2 முதல் 4 ஆண்டுகளில் தயாரிக்க முயல்வோம். அதன்பின் இறக்குமதியை நிறுத்தலாம் என்பதாகும்” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

          
SCROLL FOR NEXT