மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஆந்திர மாநிலத்தில் போலீஸார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதில், வியாழக்கிழமை ஒரே நாளில், 175 கிலோ தங்கம், 1500 கிலோ வெள்ளி, ரூ.2 கோடி ரொக்கப் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தேர்தலின்போது பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் ஆந்திரம் முழுவதும் கூடுதலாக 813 சிறப்பு வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாகன சோதனை மையங்களில் பைக் முதல் கார், ஜீப், லாரி மற்றும் அரசு, தனியார் பஸ்கள் என அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனையிடப்பட்டு வருகின்றன.
இந்த சோதனைகள் மூலம் கடந்த 10 நாட்களில் மட்டும் எந்தவித ஆவணங்களும் இல்லாத, சுமார் ரூ.65 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வியாழக் கிழமை ஒரேநாளில் விஜயவாடா, இப்ரஹிம் பட்டினம் தொனபண்டா சோதனை சாவடி அருகே நடத்திய வாகன சோதனையில், காரில் ஹைதராபாத்துக்கு கொண்டு செல்லப்பட்ட 175 கிலோ தங்கமும், 1500 கிலோ வெள்ளியும் பல கோடி ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில், ரொக்க பணம் தனியார் வங்கிக்கு சொந்தமானது என ஆவணங்கள் காட்டியதால் பணத்தை போலீஸார் திருப்பி வழங்கி விட்டனர். ஆனால், தங்கம் மற்றும் வெள்ளிக்கு எந்த வித ஆவணங்களும் இல்லாததால் இதனை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதே போன்று சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அருகே உள்ள வாம்பல்லி தணிக்கை சாவடி அருகே நடத்திய வாகன சோதனையில், காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 கோடியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அன்றே சொன்னது ‘தி இந்து’
2005-க்கு முன்னர் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியானபோதே கருப்பு பண முதலைகளும் பதுக்கல்காரர்களும் தங்கத்தை வாங்கிப் பதுக்கப் போகிறார்கள்.
இதனால் இந்தியாவுக்குள் வரும் கடத்தல் தங்கத்தின் அளவு அதிகரிக்கும் என முன்கூட்டியே (ஜனவரி 30) சொன்னது ‘தி இந்து’. நாம் சொன்னது போலவே தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக கடத்தல் தங்கம் ஏராளமாக பிடிபட்டு வருகிறது.