பிரதமர் மோடி அறிவித்த தற்சார்புபொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து 101 பாதுகாப்புத் தளவாடங்களான துப்பாக்கிகள், தானியங்கி துப்பாக்கிகளை இறக்குமதி செய்யத் தடை விதித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அறிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தற்சார்புபொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் முக்கிய நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகியுள்ளது. இதன்படி, 2020 முதல் 2024-ம் ஆண்டுக்குள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 101 வகையான பாதுகாப்பு தளவாடங்களுக்கு படிப்படியாகத் தடை விதிக்கப்படும்.
இந்த 101 வகையான பாதுகாப்புத் தளவாடங்களில் உயர்ரக தொழில்நுட்ப துப்பாக்கிகளான ஆர்ட்டிலரி கன், அசால்ட் ரைஃபிள், கார்வெட், சோனார் சிஸ்டம், லகுரக ஹெலிகாப்டர்கள், போக்குவரத்துக்கான விமானம், ராடர்கள் உள்ளிட்டவை இறக்குமதி செய்வது படிப்படியாக நிறுத்தப்படும்.
இந்த பாதுகாப்புத் தளவாடங்கள் அனைத்தையுமே உள்நாட்டிலேயே தயாரிக்க தேவையான நடவடிக்கைகள் ஊக்கமளிக்கப்படும். இந்தப் பாதுகாப்புத் தளவாடங்கள் அனைத்தும் வரும் 2024-ம் ஆண்டுக்குள் இறக்குமதி செய்வது தடை செய்யப்படும்.
இந்திய பாதுகாப்புத் துறையில் எதிர்பார்க்கப்பட்ட தேவைகள் குறித்து விவரிக்கவே, இந்த பட்டியலை அறிவிக்கப்பட்டது. உள்நாட்டு உற்பத்தி, தொழில்களை ஊக்குவிக்கவவும் உள்நாட்டுமயமாக்கலின் இலக்கை அடைய சிறந்த முறையில் தயாராக உதவும்.
அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள உள்நாட்டுத் தொழில்கள் ஏறக்குறைய ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான அரசு ஒப்பந்தங்களைப் பெறும்.
ராணுவத்துக்கான எஎப்பி போர் வாகனங்களை வெளிநாடுகளில் இருந்து வாங்குவது 2021-ம் ஆண்டுக்குள் நிறுத்தப்படும். இந்த வகையில் ரூ.5 ஆயிரம் கோடி ஒப்பந்தம் உள்நாட்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும்.
கப்பற்படை சார்பில் வெளிநாடுகளில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல் இறக்குமதிக்கு 2021-ம் ஆண்டு டிசம்பருக்குள் தடைவிதிக்கப்படும். அதன் மூலம் ரூ.42 ஆயிரம் கோடி ஒப்பந்தம் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும்.
விமானப்படை சார்பில் எல்சிஏ எம்கே 1ஏ லகுரக போர்விமானங்களை இறக்குமதி செய்வது 2020டிசம்பர் மாதத்தோடு தடை செய்யப்படும். 123 விமானங்களுக்கான ஆர்டர்கள் ரூ.85 ஆயிரம் கோடி உள்நாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும்.
இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டுள்ள 101 வகையான பாதுகாப்புத் தளவாடங்களை இனிமேல் நம்முடைய தேவைக்கு ஏற்றார்போல் வடிவமைத்து, மேம்படுத்தி, தொழில்நுட்பத்தை புகுத்தி உருவாக்கலாம்.
உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை உதவும். தரைப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றிலிருந்து கடந்த 2015 முதல் 2020-ம் ஆண்டுவரை ரூ.3.50 லட்சம் கோடிக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் அதாவது ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்த அடுத்த 7 ஆண்டுகளில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.