கடந்த 1990களில் நடந்த விமான விபத்தில் சிக்கி உயிர்தப்பிய கேப்டன் தீபக் சாத், 6 மாதம் தீவிர சிகிச்சைக்குப் பின், தனது மனவலிமையால் மீண்டும் விமானியாக விமானத்தில் பறந்தார். ஆனால், கோழிக்கோட்டில் நேற்று நடந்த விமான விபத்து துரதிர்ஷ்டவசமாக அவரின் உயிரைக் குடித்தது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயிலிருந்து கோழிக்கோடு நகரில் நேற்று இரவு 7.41 மணிக்கு தரையிறங்கியபோது, விமானியின் கட்டுப்பாட்டை மீறிய விமானம் ஓடு பாதையிலிருந்து விலகி 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இரண்டாகப் பிளந்தது. இந்த விமான விபத்தில் விமானி தீபக் சேத், துணை விமானி அகிலேஷ் குமார் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலியான கேப்டன் தீபக் சாத் இந்திய விமானப் படையில் விங் கமாண்டராகப் பணியாற்றியவர். கடந்த 1990களில் நடந்த விபத்தில் தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்கில் பலத்த காயமடைந்த தீபக் சாத் 6 மாதம் ஓய்வில் இருந்தார். மீண்டும் விமானியாக வருவார் என யாரும் எதிர்பாராத நேரத்தில் தனது மனவலிமையால் மீண்டும் விமானியானார்.
இதை தீபக் சாத்தின் உறவினர் நிலேஷ் சாத் என்பவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலைத் துறையின் நிதி ஆலோசகராக நிலேஷ் சாத் பணியாற்றி வருகிறார்.
கேப்டன் தீபக் சாத் பற்றி அவர் குறிப்பிடுகையில், “என்னுடைய உறவினரும், நண்பருமான தீபக் சாத், கோழிக்கோடு விமான விபத்தில் பலியாகிவிட்டார் எனும் செய்தியை நம்பவே கடினமாக இருக்கிறது. வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை துபாயிலிருந்து கோழிக்கோட்டுக்கு தீபக் சாத் இயக்கினார்.
தீபக் சாத் 36 ஆண்டுகாலம் விமானத்தை இயக்கிய அனுபவம் உடையவர். தேசிய பாதுகாப்பு அகாடமியில் சிறப்பாகச் தேர்ச்சி பெற்று விருது பெற்ற தீபக் சாத், 21 ஆண்டுகள் இந்திய விமானப் படையில் பணியாற்றினார். அதன்பின் கடந்த 2005-ம் ஆண்டு வர்த்தகரீதியான விமானப் போக்குவரத்துக்கு தீபக் சாத் திரும்பினார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன் என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிய தீபக் சாத், மிகவும் நகைச்சுவையாகப் பல கதைகள் கூறினார். வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் பங்கேற்று, இந்தியர்களை வெளிநாடுகளில் இருந்து அழைத்து வருவதைப் பெருமையாகக் கருதுகிறேன் என்று என்னிடம் தீபக் சாத் தெரிவித்தார்.
நான் அவரிடம், “ தீபக், பயணிகளை அழைத்து வர அனுமதிக்காத நாடுகளுக்குக் காலியான விமானத்தோடுதான் செல்வீர்களா எனக் கேட்டேன். அதற்கு தீபக் என்னிடம், “இல்லை ஒருபோதும் அப்படிச் செய்யமாட்டோம். பழங்கள், காய்கறிகள், மருந்துகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டுதான் செல்வோம்” என்றார். இதுதான் நான் அவரிடம் கடைசியாகப் பேசியது.
கடந்த 1990களில் இந்திய விமானப் படையில் பணியாற்றியபோது, தீபக் சாத் விமான விபத்தில் சிக்கினார். தலையில் பல இடங்களில் காயம், உடலிலும் காயம் என 6 மாதங்கள் தீவிர ஓய்வுக்குப் பின் மீண்டும் விமானத்தில் பறந்தார். அவரின் துணிச்சலான மனவலிமைதான் மீண்டும் விமானியாக்கியது''.
இவ்வாறு நிலேஷ் சாத் தன் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
கேப்டன் தீபக் சாத்துக்கு மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். தீபக் சாத்தின் மகன் வசந்த் சாத் பிரிகேடியராகவும், மற்றொரு மகன் விகாஸ் ராணுவத்தில் கேப்டனாகவும் பணியில் உள்ளனர். மும்பையில் உள்ள சாந்திவாலி பகுதியில் உள்ள நகர் அம்ரித் சக்தி குடியிருப்பில் தீபக் சாத் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.