கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் போயிங் 737, ஐஎக்ஸ் 1344 எண் கொண்ட விமானம் கோழிக்கோடு நகருக்கு இயக்கப்பட்டது.
இந்த விமானத்தில் 10 குழந்தைகள் உள்ளிட்ட 184 பயணிகள், 4 விமானப் பணிப்பெண்கள், 2 பைலட்கள் என 190 பேர் பயணித்தனர். கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் நேற்று இரவு 7.41 மணிக்கு விமானம் தரையிறங்கியபோது, விமானியின் கட்டுப்பாட்டை மீறி ஓடு பாதையிலிருந்து விலகி 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விமானம் இரண்டாகப் பிளந்தது. இந்த விமான விபத்தில் இரு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கறுப்புப் பெட்டி மீட்பு
இந்த விமான விபத்து குறித்து விசாரணை நடத்த இரு விசாரணைக் குழுக்களை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அமைத்திருந்தது. அந்த அதிகாரிகள் இன்று காலை கோழிக்கோடு வந்து சேர்ந்தனர். அவர்கள் விமான விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து, விமான நிலைய அதிகாரிகள், விபத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
அதன்பின் விமானத்தின் கறுப்புப் பெட்டி எனச் சொல்லப்படும் டிஜிட்டல் பிளைட் டேட்டா ரெக்கார்டர் (டிஎப்டிஆர்), காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் (சிவிஆர்) ஆகியவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்து மீட்டனர். இந்த கறுப்புப் பெட்டி டெல்லி கொண்டு செல்லப்பட்டு அங்கு விபத்து குறித்து ஆய்வு செய்யப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.10 லட்சம் இழப்பீடு
இதற்கிடையே மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திக்சிங் பூரியும் கோழிக்கோடு நகருக்கு இன்று காலை வந்து சேர்ந்தார். விமான விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட அவர், விமான விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்து, மீட்புப் பணிகளையும், காயமடைந்தோர் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது மத்திய அமைச்சர் ஹர்திக் சிங் பூரி நிருபர்களிடம் கூறுகையில், “விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும்போது விபத்துக்குள்ளான காரணம் தெரியவரும்.
விமானப் போக்குவரத்துத் துறை மூத்த அதிகாரிகளுடன் இனிமேல் ஆலோசனை நடத்துவேன். விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்ளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், தீவிரமாகக் காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசாகக் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு
இதற்கிடையே மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபால கிருஷ்ணன் கூறுகையில், “விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவரைத் தவிர அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 149 பயணிகள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 16 பயணிகளின் நிலைமை மட்டும் மிகுந்த கவலைக்கிடமாக இருந்து வருகிறது அவர்களுக்குத் தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
விமான விபத்தில் உயிரிழந்த ஒருவரின் ரத்தமாதிரி பரிசோதிக்கப்பட்டதில் அவருக்குக் கரோனா வைரஸ் இருப்பது உறுதியானதால் மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து அறிந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரும் மத்திய அமைச்சருமான வி.முரளிதரன் பிரதமர் மோடியின் அறிவுரையின் பேரில் இன்று காலை கோழிக்கோடு வந்து சேர்ந்தார்.
விமான விபத்துக் குறித்தும், எவ்வாறு நடந்தது, விசாரணை நிலவரம், காயமடைந்தவர்கள் நிலை ஆகியவை குறித்தும் மத்திய அமைச்சர் முரளிதரனிடம் விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.