இந்தியா

தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக கிரிஷ் சந்திர முர்மு பதவியேற்பு: முதல்  பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்

செய்திப்பிரிவு

தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக கிரிஷ் சந்திர முர்மு இன்று பதவியேற்றுக் கொண்டார் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த பதவிக்கு வருவது இதுவே முதன்முறையாகும்.

தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக இருந்த ராஜீவ் மெஹ்ரிஷியின் பதவிக்காலம் அண்மையில் முடிந்தத. இதையடுத்து ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக இருந்த முர்மு அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். முன்னதாக புதிய பதவியேற்க வசதியாக அவர் துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து முர்மு இன்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி பதவி என்பது அரசியலமைப்புச் சட்ட பதவியாகும். அதாவது, மத்திய அரசு, மாநில அரசுகளின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்யும் பொறுப்பு உள்ள பதவியாகும். தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் அனைத்தும் மாநில சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி பதவியில் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவடையும் வரை முர்மு பதவியில் இருப்பார். இதில் எது முதலில் வருகிறதோ அதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் . தற்போது முர்முவுக்கு 61 வயதாகிறது.

ஒடிசா மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய மயூர்பானி மாவட்டத்தில் பழங்குடி சமூகத்தில் பிறந்தவர் கிரிஷ் சந்திரா முர்மு. அவர் 1985 குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியாவார். நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் அவரின் முதன்மை செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT