ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் 12 பேர் தனிப்பட்ட முறையில் வெளியூர் சென்றுள்ளனர், அந்த தகவல் எங்களுக்கு தெரியும் சட்டப்பேரவை கூடும்போது அவர்கள் வருவார்கள் என அம்மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா தெரிவித்தார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய துணை முதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டின் பதவி பறிக்கப்பட்டது.
இதனிடையே, சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது. அப்போது தனது அரசுக்கு உள்ள பலத்தை நிரூபிக்க முதல்வர் கெலாட் முடிவு செய்துள்ளார். தனக்கு 102 எம்எல்ஏ.க்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத் தொடர் கூடுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டதால் குதிரை பேரம் தீவிரம் அடைந்துள்ளதாகவும் எம்எல்ஏ.க்களின் விலை முதல் தவணையாக ரூ.10 கோடி, மீண்டும் ரூ.15 கோடியில் இருந்து இப்போது வரம்பு இல்லாமல் அவர்களுக்கான விலை உயர்ந்துள்ளதாகவும் இந்த குதிரை பேரத்தில் ஈடுபடுபவர்கள் யார் என்று எல்லாருக்கும் தெரியும் என்று சச்சின் பைலட்டை மறைமுகமாக அவர் குற்றம் சாட்டினார்.
கடந்த 3 வாரங்களாக காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ஜெய்ப்பூர் அருகே ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். அவர்கள் பின்னர் சிறப்பு விமானம் மூலம் ஜெய்சால்மாருக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள பண்ணை வீட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் பாஜக எம்எல்ஏ 12 பேர் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே இன்று திடீரென பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜக எம்எல்ஏக்கள் 12 பேர் தனிப்பட்ட முறையில் வெளியூர் சென்றுள்ள விவரம் எங்களுக்கு தெரியும். பாஜக சட்டப்பேரவைக் கூட்டம் கூடும்போது அவர்கள் கலந்து கொள்வா்கள். அவர்கள் கட்சியுடன் ஒருங்கிணைந்துள்ளனர். அவர்களை யாரும் பிரிக்க முடியாது. அவர்களை பற்றி காங்கிரஸ் அவதூறு பிரசாரம் செய்கிறது. ராஜஸ்தான் முதல்வர் மோசமான அரசியல் செய்கிறார்.’’ எனக் கூறினார்.