காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் நேற்று முன்தினம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, 130 கோடி இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால், ஐ.நா.புள்ளிவிவரப்படி நாட்டின் மக்கள் தொகை 138 கோடியைத் தாண்டிவிட்டது. குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், பிரதமர் மோடி 8 கோடி மக்களைப் பற்றி குறிப்பிடாததால் பலர் கவலை அடைந்துள்ளனர். இது கவனக்குறைவாக இருந்தால், அதை அவர் திருத்திக் கூற வேண்டும்” என கூறியுள்ளார்.
கடந்த 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசும்போது, “ராமர் கோயில் அமைவதற்கு ஒத்துழைப்பு நல்கிய 130 கோடி இந்தியர்களுக்கும் அவர்கள் சார்பாக நான் வணக்கம் தெரிவிக்கிறேன்” என கூறியது குறிப்பிடத்தக்கது.