இந்தியா

கரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து இந்திய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை

செய்திப்பிரிவு

சீனாவில் இருந்து கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேட்டுக் கொண்டபடி ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் மாத்திரைகளை இந்தியா அனுப்பி வைத்தது. தவிர மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டன. அதற்காக நன்றி தெரிவித்த ட்ரம்ப், இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை வழங்கினார். கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவும் நேற்று தொலைபேசியில் பேசினர். அப்போது, இந்திய - பசிபிக் பிராந்தியத்தில், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

அமெரிக்க வெளியுறவுத் துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் கேல் பிரவுன் கூறும்போது, ‘‘இந்திய - பசிபிக் பிராந்தியம் மற்றும் உலகம் முழுவதும் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பு ஆகியவை மேம்பட, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலிமையாக இருக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஒருமனதாக வலியுறுத்தி உள்ளனர்’’ என்றார்.

மேலும், இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது. எனவே, இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை மேலும் வலிமையாக்குவதற்கான வழிமுறைகளை காண வேண்டும் என்று ஜெய்சங்கர் மற்றும் மைக் பாம்பியோ இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT