ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏ-க்கள் ஆளும் காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட்டதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இது அசோக் கெலாட் அரசுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
ராஜஸ்தானில் கடந்த 2018 தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற 6 எம்எல்ஏ-க்கள் கடந்த 2019 செப்டம்பரில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதனை சட்டப்பேரவைத் தலைவர் சி.பி.ஜோஷி ஏற்றுக்கொண்டு 6 பேரையும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களாக அங்கீரித்துள்ளார். இதற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் பாஜக எம்எல்ஏ மதன் திலவார் சார்பில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சட்டப்பேரவைத் தலைவர் ஜோஷியும் 6 எம்எல்ஏ-க்களும் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 11-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் எம்எல்ஏ-க்களின் இணைப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கோரி, ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகளை கொண்ட உயர் நீதிமன்ற அமர்வில் பகுஜன் சமாஜ் மற்றும் பாஜக எம்எல்ஏ சார்பில் கடந்த செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், இணைப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர். வரும் 11-ம் தேதி தனி நீதிபதி அமர்வில் இதனை முறையிடுமாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், மாநில சட்டப்பேரவை வரும் 17-ம் தேதி கூடுகிறது. இதில் முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கு கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவு கெலாட் அரசுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
அசோக் கெலாட் தனக்கு 102 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருப்பதாக கூறி வருகிறார். இந்நிலையில், எதிர்க்கட்சியினரின் கோரிக்கையை உயர் நீதிமன்ற அமர்வு ஏற்றுக்கொண்டிருந்தால், கெலாட் அரசுக்கான ஆதரவு 96 ஆக குறைந்திருக்கும். இது நம்பிக்கை வாக்கெடுப்பில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான பாஜகவின் பலம் 72 ஆக உள்ளது. இவர்களுடன் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ-க்களும் சேர்ந்து அரசுக்கு எதிரானவர்கள் பலம் 97 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.