குடும்ப வன்முறை வழக்கில் விசாரணையை தவிர்த்து வரும், டெல்லி முன்னாள் சட்ட அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவுமான சோம்நாத் பாரதிக்கு போலீஸார் நேற்று மீண்டும் நோட்டீஸ் அனுப்பினர்.
இதுகுறித்து டெல்லி காவல் துறையின் தென்மேற்கு சரக இணை ஆணையர் தீபேந்திர பதக் கூறும்போது, “குடும்ப வன்முறை வழக்கில் சோம்நாத் பாரதிக்கு வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால் அவர் வரவில்லை. எனவே 2-வது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். விசாரணைக்கு வந்தால் அவர் கைது செய்யப்படுவார் என்று கூறமுடியாது. விசாரணையை அவர் தொடர்ந்து தவிர்த்துவந்தால் அவர் மீது சட்டப்படி நடடிக்கை எடுப்பது உறுதி” என்றார்.
மேற்கு டெல்லியின் துவாரகா வடக்கு காவல் நிலையத்தில் சோம்நாத் பாரதி மீது குடும்ப வன்முறை, கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் கடந்த வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சோம்நாத் பாரதியின் மனைவி லிபிகா மித்ரா கடந்த ஜூன் 10-ம் தேதி அளித்த புகாரின் மீது இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர்.
சோம்நாத் பாரதி 2010-ம் ஆண்டு தன்னை திருமணம் செய்துகொண்டது முதல் தன்னை அடித்து கொடுமைப்படுத்தி வருவதாகவும் ஒருமுறை கொல்ல முயன்றதாகவும் லிபிகா தனது புகாரில் கூறியுள்ளார்.