ராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழா மற்றும் பூமிபூஜை சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது அரசியல் சாசனச் சட்டத்தை மீறிய செயல் என்று சிபிஎம் கட்சிப் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தொடர் ட்வீட்களில் கூறியிருப்பதாவது:
மாநில ஆளுநர், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் ராமர் கோயில் கட்டுமானத்தை அரசு எடுத்து நடத்துவது இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அம்சத்தை மீறுவது. மேலும் உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் கட்டும் பொறுப்பை அறக்கட்டளையிடம் விட வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்த நிகழ்வு பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்துகிறது. பாபர் மசூதி இடிப்பு சட்ட விரோதம் அதைச் செய்தவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியது.
ஆனால் ராமர் கோயில் கட்டுமானம் அத்தகைய தண்டனைகள் ஏதுமின்றி தொடங்கி விட்டது. இந்த பூமிபூஜை நிகழ்வு மக்களின் மத உணர்வுகளை நேரடியாகச் சுரண்டும் மலிவான அரசியல் நோக்கம் கொண்டது. அரசியல் சாசனத்தின் எழுத்தையும் உணர்வையும் வெளிப்படையாக மீறும் செயலாகும்.
மேலும் கோவிட்19 பெருந்தொற்று கட்டுப்பாடுகளை மீறி நடந்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறும்போது, “ராமர் கோயில் விழாவும், அதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பங்கேற்பும் அரசை ஆர்.எஸ்.எஸ்.தான் வழிநடத்துகிறது என்பதையே உறுதி செய்கிறது. பிரதமர், யோகி ஆதித்யநாத் பங்கேற்பு நாட்டில் ஒரேயொரு மதம்தான் உள்ளது என்பதை பறைசாற்றுவதாக உள்ளது. நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக இயல்பை ஆபத்தில் வைத்துள்ளது” என்றார்.