இந்தியா

பூமி பூஜைக்கு வந்த போது அனுமன் கோயிலுக்கு பிரதமர் முதலில் சென்றது ஏன்?

செய்திப்பிரிவு

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, முதலில் அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அப்போது அவர் தங்கநிற பட்டு குர்தாவும் அங்கவஸ்திர வேட்டியும் அணிந்திருந்தார்.

மேலும் தோளில் காவி நிற துண்டு அணிந்திருந்தார். அப்போது பிரதமருடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் வந்தார்.

அனுமன் கோயிலில் தீபாராதனை காட்டி வழிபட்ட பிரதமர் மோடி, பிறகு பிரகாரத்தை சுற்றி வந்து வணங்கினார். மேலும் பிரதமர் நெடுஞ்சான் கிடையாகவும் விழுந்து அனுமனை வணங்கினார். பிரதமர் நரேந்திர மோடிக்கு தலைப்பாகை அணிவித்து கோயில் பண்டிதர் கவுரவித்தார். சுமார் 15 நிமிடங்கள் அங்கிருந்த பிரதமர் மோடி பிறகு, பூமி பூஜை நடைபெறும் இடத்துக்கு வந்தார்.

ராமர் கோயில் பூமி பூஜைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி முதலில் அனுமன் கோயிலுக்கு சென்றது குறித்து அக்கோயில் பண்டிதர் ராஜு தாஸ் கூறும்போது, “ராவணனை வென்றுவிட்டு ராமர் அயோத்தி திரும்பியபோது, அனுமன் வசிக்க ராமர் ஓர் இடத்தை கொடுத்தார். அந்த இடமே தற்போது அனுமன் கோயில் உள்ள இந்த இடமாகும்.

கோயிலை பாதுகாக்கிறார்

அனுமன் இங்கிருந்துதான் ராமர் கோட்டை அல்லது கோயிலை பாதுகாக்கிறார் என்பது நம்பிக்கை. ராமனின் தீவிர பக்தனான அனுமனின் ஆசிர்வாதம் இல்லாமல் எந்தவொரு பணியும் முழுமை அடையாது என்று புராணங்கள் கூறுகின்றன. எனவேதான் பிரதமர் மோடி முதலில் இங்கு வந்து வழிபட்டார்” என்றார்.

இந்த அனுமன் கோயில் வட இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற அனுமன் கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயில் வளாகத்தில் ஹனுமனின் தாயார் அஞ்சனா தேவிக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு குழந்தை அனுமன் அஞ்சனா தேவியின் மடியில் அமர்ந்திருக்கிறார்.

SCROLL FOR NEXT