அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதை முன்னிட்டு வாரணாசியில் ராமரின் படத்துக்கு ஆரத்தி எடுத்த முஸ்லிம் பெண்கள்.  
இந்தியா

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முஸ்லிம்களின் ஆதரவு உண்டு: மசூதி கட்ட நிலம் பெற்ற அறக்கட்டளையின் பொருளாளர் கருத்து

ஆர்.ஷபிமுன்னா

அயோத்தியின் ராமர் கோயிலுக்கு முஸ்லிம்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என இந்தோ இஸ்லாமிக் கல்சுரல் பவுண்டேஷன் டிரஸ்ட் (ஐஐசிபிடி) பொருளாளர் பைஸ் அப்தாப் தெரிவித்துள்ளார். இப்புதிய அறக்கட்டளை பாபர் மசூதிக்கு ஈடாக அயோத்தியில் புதிய மசூதி அமைக்க 5 ஏக்கர் நிலம் பெற்றுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஐஐசிபிடி பொருளாளர் பைஸ் அப்தாப் கூறும்போது, "அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு இந்திய முஸ்லிம்கள் அனைவரின் ஆதரவு உள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு நமது பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு முன்னதாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பாபர் மசூதிக்கு ஈடாக உத்தரபிரதேச அரசு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி உள்ளது' என்றார்.

மசூதி கட்டுவதற்காக வழங்கப்பட்டுள்ள நிலம், ராமஜென்ம பூமி வளாகத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனிபூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இதற்கான நிலப் பத்திரங்களை அயோத்தி மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் ஜா, உத்தரபிரதேச சன்னி முஸ்லிம் மத்திய வக்ஃபு வாரியத்தினரிடம் வழங்கினார். இதில் மசூதியுடன் சேர்த்து ஒரு கல்விக்கூடமும், ஆய்வுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு நூலகமும், அருங்காட்சியகமும் அங்கு அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை செய்ய ஐஐசிபிடி அறக்கட்டளைக்கு 9 உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர். மேலும் 6 உறுப்பினர்கள் பின்னர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கிடையே, ராமர் கோயிலுக்கான பூமி பூஜை போடப்பட்டதை முன்னிட்டு வாரணாசியில் முஸ்லிம் பெண்கள் கூடி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். இங்குள்ள சங்கட் மோர்ச்சன் எனும் அனுமன் கோயிலில் அவர்கள் கூடி அனுமன் சலிஸா மற்றும் ராம் கீர்த்தனைகளை உருது மொழியில் பாடினர். இந்நிகழ்ச்சி முஸ்லிம் மகிளா மஞ்ச் அமைப்பின் சார்பில் நடைபெற்றது.

இந்த அமைப்பின் அமைப்பாளர் நஸ்ரின் அன்சாரி ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, "அயோத்தியில் அமையவிருக்கும் பிரம்மாண்டமான ராமர் கோயிலால் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை கிடைக்கும். எந்த ஒரு இந்தியரும் முஸ்லிமாக மதம் மாறலாம். அதனால், அவர்களது மூதாதையர்களும் மதம் மாறியதாக அர்த்தம் இல்லை. இந்து-முஸ்லிம் என அனைவரது கலாச்சாரமும் ஒன்று தான்" என்றார்.

வாரணாசியின் பிரபல சங்கட் மோர்ச்சன் கோயிலில் 14 வருடங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். அப்போது முதல் இக்கோயிலுக்கு வரத் தொடங்கிய நஸ்ரின் அன்சாரி, அனுமன் சலிஸாவை உருது மொழியில் பாடி வருகிறார். அப்போதும் அவர் முஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்தபடியே வந்து செல்கிறார். இவருடன் இந்து பெண்களும் அமர்ந்து பாடுகின்றனர்.

SCROLL FOR NEXT