என்ஐஏ அமைப்பால் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர் : கோப்புப்படம் 
இந்தியா

கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு அனுமதி

பிடிஐ


கேரளாவில் ஐக்கி அரபு அமீர தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் ஆகிய 3 பேரை காவலில் எடுத்து அமலாக்கப்பிரிவு விசாரிக்க என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கடந்த 5-ம் தேதி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமார் என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சரித் குமார் அளித்த தகவலின்படி, முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸவப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்தனர்.

இதில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரக தூதரத்தின் முன்னாாள் ஊழியர் ஆவார். மேலும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் விற்பனை மேலாளராகாக ஒப்பந்த அடிப்படையில் இருந்தபோதுதான் இந்த குற்றச்சாட்டில் சிக்கினார்.

இவர்கள் மூவரையும் என்ஐஏ அமைப்பின் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள் மூவரையும் விசாரிக்க என்ஐஏ அமைப்புக்கு சிறப்பு நீதிமன்றம் இம்மாதம் 21-ம் தேதி வரை விசாரிக்க அனுமதியளித்துள்ளது.

தங்கம் கடத்தல் தொடர்பாக விசாரித்து வரும் சுங்கத்துறையினர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, மூவரையும் முறைப்படி கைது செய்தனர். இருப்பினும் என்ஐஏ காவலிலேயே மூவரும் இருந்து வந்தனர்.

இதற்கிடையே தங்கம் கடத்தல் விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக என்ஐஏ விசாரணையில் தெரிவித்திருந்தனர். என்ஐஏ விசாரணையின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த அமலாக்கப்பிரிவினர், சந்தீப் நாயர், ஸ்வப்னா சுரேஷ், சரித் ஆகிய மூன்று பேரை காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி திருவனந்தபுரம் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அவர்ளிடம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்த தொடர்பாக கேள்விகள் கேட்டு பதில் பெற வேண்டியதுள்ளது என்றும் மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த மனு என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஸ்வப்னா, சரித், சந்தீப் நாயர் மூவரையும் அமலாக்கப்பிரிவு 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தார்.

SCROLL FOR NEXT