கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவில் 19 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு; 13 லட்சத்தை நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை: இரு நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு தொற்று

பிடிஐ

இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 லட்சத்தைக் கடந்துள்ளது, கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் 18 லட்சத்தை எட்டிய நிலையில் இன்று 19 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் புதிதாக 52 ஆயிரத்து 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 19 லட்சத்து 8 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.

இதில் ஆறுதல் தரும் செய்தியாக கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கி, 12 லட்சத்தை 82 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 67.19 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவுக்கு 5 லட்சத்து 86 ஆயிரத்து 244 பேர் தற்போது சிகிச்சை எடுத்து வருகின்றனர். ஒட்டுமொத்த கரோனா பாதிப்பில் 30.72 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து 7-வது நாளாக நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன் 18 லட்சம் எட்டிய நிலையில் இன்று 19 லட்சத்தைக் கடந்துள்ளது.

கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 852 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு 39 ஆயிரத்து 795 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் இந்தியாவில் உயிரிழப்பு 2.09 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஐசிஎம்ஆர் தகவலின்படி ஒட்டுமொத்தமாக 2 கோடியே 14 லட்சத்து 84 ஆயிரத்து 402 மாதிரிகள் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்கிழமை மட்டும் 6 லட்சத்து 19 ஆயிரத்து 652 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் நடந்த 857 இறப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 300 பேர், கர்நாடகாவில் 110 பேர், தமிழகத்தில் 108 பேர், ஆந்திராவில் 67 பேர், மேற்கு வங்கத்தில் 54 பேர், உத்தரப்பிரதேசத்தில் 39 பேர், குஜராத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

பஞ்சாப்பில் 20 பேர், பிஹார், ராஜஸ்தானில் தலா 17 பேர்,தெலங்கானாவில் 13 பேர், மத்தியப்பிரதேசம், டெல்லியில் தலா 12 பேர், ஜம்மு காஷ்மீரில் 10 பேர் உயிரிழந்தனர்.

ஒடிசாவில் 9 பேர், சத்தீஸ்கர், ஹரியாணாவில் தலா 8 பேர், உத்தரகாண்டில் 5 பேர், கோவாவில் 4 பேர், கேரளா, ஜார்க்கண்டில் தலா 3 பேர், அந்தமான் நிகோபர், புதுச்சேரி, திரிபுராவில் தலா 2 பேர், சண்டிகரில் ஒருவர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று 300 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 16 ஆயிரத்து 142ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 108 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 4,349 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 55 ஆயிரத்து 152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் 9 ஆயிரத்து 897 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,033 ஆக அதிகரித்துள்ளது.

குஜராத்தில் 14ஆயிரத்து 690 பேர் சிகிச்சையில் உள்ளனர். 25 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,533 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 73,854 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 110 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 2,704 ஆக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தில் 11,570பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT