பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

96 சதவீத வென்டிலேட்டர்கள் உள்நாட்டில் வாங்கப்பட்டவை: பெரும்பாலும் பிஎம் கேர்ஸ் வழங்கியவை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

பிடிஐ

அரசு மருத்துவமனைகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட60 ஆயிரம் வென்டிலேட்டர்களில் 96 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை, உள்நாட்டில் கொள்முதல் செய்யப்பட்டவை. அவற்றை பெரும்பாலும் பிஎம் கேர்ஸ் நிதிதான் வழங்கியுள்ளது என்று மத்திய சுகாதாாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷான் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

இதுவரை அரசு மருத்துவமனைகளுக்காக 60 ஆயிரம் வென்டிலேட்டர்களை கொள்முதல் செய்துள்ளோம். இதில் 18 ஆயிரம் வென்டிலேட்டர்கள் ஏற்கெனவே மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த 60 ஆயிரம் வென்டிலேட்டர்களில் 50 ஆயிரம் பிஎம் கேர்ஸ் நிதிமூலம் வழங்கப்பட்டவை.இதற்காக ரூ.2 ஆயிரம் கோடி பிஎம் கேர்ஸ் நிதி ஒதுக்கப்பட்டது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷான் : கோப்புப்படம்

பிஎம் கேர்ஸ் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட வென்டிலேட்டர்கள் அனைத்தில் அதன் செயல்பாட்டைக் கண்காணிக்கும் வகையில் சிப் பொருத்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய 96 சதவீதம் வென்டிலேட்டர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை, உள்நாட்டில் கொள்முதல் செய்யப்பட்டவை.

ஏஜிவிஏ வென்டிலேட்டர்கள் தரக்குறைவாக இருக்கிறது என்று ஒதுக்கப்பட்டன. இந்த வென்டிலேட்டர்களை அரசு கொள்முதல் செய்யவில்லை. தன்னார்தொண்டு நிறுவனங்கள் கொள்முதல் செய்து மகாராஷ்டிராவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கின.

நாட்டில் தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் 0.27 சதவீதம் கரோனா நோயாளிகள்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கண்காணித்து வந்ததில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் மொத்த எண்ணிக்கையில் ஒரு சதவீதத்தைக் கூட தாண்டவில்லை.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வென்டிலேட்டர்களை வாங்குவதில்தான் நாங்கள் முக்கியத்துவம் அளித்தோம். ஆனால், உள்நாட்டு தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் சென்சார், ஸ்டெப்பர் மோட்டார், பிரஸர் டிரான்ஸ்டியூஸர், கன்ட்ரோல் வால்வு போன்றவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இங்கு தயாரிக்கின்றனர்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வென்டிலேட்டர்கள் ரூ.1.50 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை இருக்கிறது. இதுவே வெளிநாடுகளில் இருந்து வாங்கினால் ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய்வரை விலை இருக்கும்.

பாதுகாப்புத்துறையின் பிஎஸ்இ பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட், ஆந்திரா அரசின் ஆந்திரா மெட் டெக் ஜோன் ஆகியவை மூலம் வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் இரு நிறுவனங்களும் சேர்ந்து 43,500 வென்டிலேட்டர்கள் தயாரிக்கின்றன.

இவ்வாறு பூஷான் தெரிவித்தார்

SCROLL FOR NEXT