ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இன்றோடு சரியாக ஓராண்டு நிறைவுறுவதை முன்னிட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட புதிய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரை சர்ச்சைக்குரிய பகுதி என்றும் சர் கிரீக் மற்றும் குஜராத்தின் ஜுனாகத்தை பாகிஸ்தானுடையது என்றும் குறித்துள்ளது.
இந்த வரைபடத்துக்கு எதிர்வினையாற்றிய மத்திய வெளியுறவு அமைச்சகம், ‘இது அரசியல் அபத்தத்தின் செயல்பாடு’ என்று சாடியுள்ளது.
“பாகிஸ்தானின் அரசியல் வரைபடம் என அழைக்கப்படும் ஒன்றை பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டதைப் பார்த்தோம். இது அரசியல் அபத்தம் அல்லாமல் வேறு என்ன? அடிப்படை ஆதாரமற்ற உரிமைகோரல்கள். குஜராத்தின் ஒரு பகுதி, ஜம்மு காஷ்மீர், லடாக்கை இணைக்கும் அவர்கள் செயல் சட்டரீதியாகவோ, சர்வதேச அளவில் நம்பகத்தன்மையானதோ அல்ல. இது முட்டாள்தனமானது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் உதவியுடன் பாகிஸ்தானின் பிரதேச ஆக்ரமிப்பு பீடிப்பு மனநிலையையே இது வெளிப்படுத்துகிறது” என்று சாடியுள்ளது.
இம்ரான் கான் மேலும் இஸ்லாமாபாத்தின் முக்கியமான சாலையை ஸ்ரீநகர் ஹை வே என்று பெயர் மாற்றம் செய்துள்ளார், இதற்கான அமைச்சரவை ஒப்புதலும் கிடைத்துள்ளது. இது முன்னதாக காஷ்மீர் ஹை வே என்று அழைக்கப்பட்டது.