ராமர் கோயில் பூமி பூஜையன்று அயோத்தி குரங்குகளுக்கு சிறப்பு உணவாகப் பழமும், தானியங்களும் அளிக்கப்பட உள்ளன. இதை அரசு சார்பில் செய்யுமாறு உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியை போல் உ.பி.யின் பல்வேறு நகரங்களிலும் குரங்குகள் தொல்லை அதிகம் உண்டு. குறிப்பாக அயோத்தியில் இவை உணவிற்காக வேண்டி பக்தர்களை தாக்கி விடுவதும் வழக்கம்.
நாளை ராமர் கோயிலின் பூமி பூஜை விழாவில் கலந்துகொள்ளும் முக்கியப் பிரமுகர்களுக்கு தொல்லை தரும் ஆபத்தும் இருப்பதாக அஞ்சப்படுகிறது. இதை சமாளிக்கும் வகையில், விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிட வந்த முதல்வர் யோகி ஒரு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, பூமி பூஜை விழாவின் போது அயோத்தியின் குரங்குகளுக்கு ஏராளமானப் பழங்களும், தானியங்களையும் உணவாக அளிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த சிறப்பு ஏற்பாட்டினை அரசு சார்பில் செய்யவும் அயோத்தி மாவட்ட நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் அயோத்தி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ‘இலங்கையில் சீதையை மீட்க ராமன் தொடுத்த போரில் அனுமர் தலைமையில் வானரப்படைகளும் முக்கிய இடம் பெற்றன.
இதனால், ராமர் கோயில் பூமி பூஜையன்று அயோத்தியின் வானரங்களும் சிறப்பாகக் கவனிக்கப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் அதன் விருப்ப உணவுகளும் அளிக்கப்படும். எனத் தெரிவித்தனர்.
அயோத்தியில் அதிகரித்து வரும் குரங்குகளுக்கு அரசு சார்பில் விருந்தளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இப்பணிக்காக குரங்குகளுடன் பழகும் திறமையான பணியாளர்களுக்கு அதன் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயிலுக்கு தரிசனம் செய்யவரும் பக்தர்களே அவைகளுக்கு உணவு பழங்களை அளித்து மகிழ்வது வழக்கமாக உள்ளது. உள்ளூர்வாசிகள் மட்டுமே சிலசமயம் குரங்குகளை விரட்டி அடிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.