இந்தியா

கரோனா பரவல் கட்டுக்கடங்காது செல்வதால் கண்காணிப்பு காவல்துறை வசம் ஒப்படைப்பு: கேரள முதல்வர் பேட்டி 

கா.சு.வேலாயுதன்

கரோனா பரவல் கட்டுக்கடங்காது செல்வதால் கண்காணிப்பு போலீஸ் வசம் மாற்றப்பட்டதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திருவனந்தபுரத்தில் திங்கட்கிழமையன்று நிருபர்களிடம் கூறியதாவது:

’’கேரளாவில் கடந்த சில தினங்களாகக் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தினமும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியும், ஆயிரத்தை நெருங்கியும் வருகிறது. கடந்த 31ஆம் தேதி 1,310 பேரும் 1-ம் தேதி 1,120 பேரும் நேற்று 1,169 பேரும் நோயால் பாதிக்கப்பட்டனர். இது தவிரக் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவுவதும் அதிகரித்து வருகிறது. இன்று கரோனா பாதித்து 2 பேர் மரணமடைந்துள்ளனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 68 வயதான கிளீட்டஸ் என்பவரும், ஆலப்புழாவைச் சேர்ந்த 52 வயதான சசிதரன் என்பவரும் மரணமடைந்துள்ளனர்.

இன்று கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 801 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் 40 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது எனத் தெரியவில்லை. இன்று வெளிமாநிலங்களில் இருந்து வந்த 85 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 55 பேருக்கும் நோய் பரவியுள்ளது. இன்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 205 பேருக்கு நோய் பரவி உள்ளது. இந்த மாவட்டத்தில் 192 பேருக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவியுள்ளது. இதில் 5 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது என தெரியவில்லை.

இந்த மாவட்டத்தில் இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 2 பேர் மட்டுமே வந்துள்ளனர். திருவனந்தபுரத்தில் நிலைமை மிக மோசமாகத் தொடர்கிறது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 106 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 101 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், தலா 85 பேர் திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களையும், 66 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 59 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 57 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 37 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 36 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 35 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 33 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 31 பேர் வயநாடு மாவட்டத்தையும், 26 பேர் இடுக்கி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று சுகாதாரத் துறையைச் சேர்ந்த 15 பேருக்கு நோய் பரவியுள்ளது. 815 பேர் இன்று நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 15,282 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 11,484 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 19,343 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சிபிநாட், ட்ரூநாட் உள்பட இதுவரை மொத்தம் 8,34,215 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 3,926 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன.

மேலும் சுகாதாரத் துறையினர், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 1,27,233 பேரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 1,254 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 1,45,234 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 1,34,455 பேர் வீடுகளிலும், 10,779 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று நோய் அறிகுறிகளுடன் 1,115 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கேரளாவில் தற்போது 506 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன.

கேரளாவில் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பதன் மூலம் நோய் பரவுவது அதிகரித்து வருகிறது. எனவே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைக் கண்டறியும் பொறுப்பை போலீசிடம் விடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் இப்பகுதிகளின் பொறுப்பு சுகாதார ஆய்வாளரிடம் இருந்தது. நோய்ப் பரவலின் வேகம் அதிகரித்து வருவதால் இந்த பொறுப்பு தற்போது போலீஸ் வசம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த எஸ்பி தலைமையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைக் கண்காணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனிமையில் இருப்பவர்கள் வெளியே செல்வது மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது உட்பட நிபந்தனைகளை மீறுவது அதிகரித்து வருகிறது. எனவே இதுபோன்று நிபந்தனைகளை மீறுபவர்களைக் கண்டுபிடிக்க போலீஸ் கடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

கரோனா நோயாளிகளுடன் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தொடர்பில் இருப்பவர்களைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்படும். இவர்கள் நோயாளிகள் எங்கெங்கு சென்றார்கள், அவருடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் யார், யார் என்ற விவரங்களைச் சேகரிப்பார்கள். மருத்துவமனைகள், சந்தைகள் உள்பட ஆட்கள் கூடும் இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறார்களா, முகக்கவசம் அணிந்துள்ளார்களா என்பதைப் போலீசார் கண்காணிப்பார்கள்.

இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்கு கொச்சி கமிஷனர் விஜய் சாக்கரே தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கேரளாவில் நோய்ப் பரவல் அதிகரித்து வருவதால் நமது அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்.

கேரளாவுக்கு இதுவரை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 7,03,977 பேர் வந்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து 4,34,491 பேரும், வெளிநாடுகளில் இருந்து 2,69,486 பேரும் வந்தனர். இவ்வாறு வந்தவர்களில் இதுவரை 3, 672 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. மேலும் அவர்கள் மூலம் நோய் பரவாமல் இருப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இது தொடக்கத்தில் மிக நல்ல பலனைத் தந்தது. ஆனால் ஒரு கட்டம் முடிந்த பின்னர் சிலரது அலட்சியம் காரணமாக தற்போது நோய்ப் பரவல் அதிகரித்துள்ளது. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சில தவறுகள் நேர்ந்துள்ளன என்பதை மறுக்க முடியாது. எனவே நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் சில கடுமையான நிபந்தனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதனால் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து குறுகியகால பயணத்திற்காகக் கேரளா வருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கடுமையான நிபந்தனைகள் பலருக்குச் சிரமத்தை ஏற்படுத்தினாலும், அது நாட்டின் நன்மைக்காக என்றே அனைவரும் கருதவேண்டும். எனவே அரசின் நடவடிக்கைகளுக்கு வழக்கம்போல பொதுமக்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் தர வேண்டும்’’.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT