இந்தியா

இந்திய சுதந்திர போராட்டத்தில் திலகரின் பங்கு முக்கியமானது: மத்திய அமைச்சர் அமித் ஷா புகழாரம்

செய்திப்பிரிவு

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பால கங்காதர திலகரின் பங்கு முக்கியமானது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

பால கங்காதர திலகரின் 100-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சர்வதேச இணையவழி மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில்பங்கேற்ற மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா பேசிய தாவது:

மத்திய அரசின் புதிய இந்தியா, சுயசார்பு இந்தியா ஆகிய திட்டங்கள் திலகரின் சுயராஜ்ய கொள்கைகளை நிறைவேற்றுபவை. இந்திய மொழிகளும், கலாச்சாரமும் நமது கல்வியில் பிரதிபலிக்க வேண்டும் என்றுதிலகர் விரும்பினார். அதன்பிறகுதான் சுதந்திரப் போராட்டத்தில் எழுச்சி ஏற்பட்டு இயக்கமாக மாறியது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியது. காங்கிரஸின் வரலாற்றைப் படித்தவர்களுக்கு இது தெரியும்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் திலகரின் பங்கு முக்கியமானது. ‘சுயராஜ்யம் எனது பிறப்புரிமை; அதனை அடைந்தே தீருவேன்’ என்ற அவரது வாக்கு, நாட்டு மக்களுக்கு பெரும் உத்வேகமாக அமைந்தது. இது சாதாரண வாசகமல்ல. வரலாற்றில் பொன் எழுத்துகளால் அவரதுவாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்டத்தை நடத்தி வந்த அதேவேளையில் பசுக்களைக் கொல்வதை திலகர்கடுமையாக எதிர்த்தார். பெண் உரிமைகளுக்காக அவர் தொடர்ந்துபோராடினார். கேசரி பத்திரிகையில் அவர் எழுதிய பெண்ணுரிமைக் கட்டுரைகள் மக்களுக்கு எழுச்சியைக் கொடுத்தன. அவரது சிந்தனைகள், கருத்துகள் எந்த காலத்துக்கும் பொருந்துபவை.

மகாத்மா காந்தி, வீர சாவர்க்கர், மதன் மோகன் மாளவியா ஆகியோரது சிந்தனைகளை படிக்கும்போது, அதில் திலகரின்கருத்துகள் பொதிந்திருப்பது தெரியும். அவரது வாழ்க்கையையும், தியாகத்தையும், வழிகாட்டுதல்களையும் இந்திய இளைஞா்கள் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு சாதனைகளைப் படைக்க வேண்டும்.

திலகரின் 100-ம் ஆண்டு நினைவுதினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 100 ஆண்டுகள் கழிந்தபின்னரும் அவர் போற்றப்படுகிறார். திலகரின் சிந்தனைகளை மாணவர்கள் படிக்க வேண்டும்.

இதன் மூலம் உங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மத்திய அரசு இப்போதுகொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT