இந்தியா

ஒரே நாடு; ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் மணிப்பூர் உட்பட 4 மாநிலங்கள் இணைந்தன

செய்திப்பிரிவு

மத்திய அரசின் ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தில் மேலும் 4 மாநிலங்கள் இணைந்துள்ளன.

வேலை நிமித்தமாகவோ அல்லது தொழில் தொடங்குவதற்காகவோ நாட்டின் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு லட்சக்கணக்கானோர் குடிபெயர்ந்து வருகின்றனர். அவ்வாறு இடம்பெயர்பவர்கள், தங்களிடம் இருக்கும் ரேஷன் அட்டையை புதிய மாநிலத்தில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், ரேஷனில் கிடைக்கும் உணவுப் பொருட்களை பெற முடியாமல் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் அனைவருக்கும் ரேஷன் உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் அட்டை’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன்படி, ஒரு குடும்பத்துக்கு வழங்கப்படும் ரேஷன் அட்டையை, நாட்டில் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தி பொருட்களை வாங்க முடியும்.

அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப் படவுள்ள இத்திட்டத்தில் ஏற்கெனவே ஆந்திரா, பிஹார், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, மிசோராம், ஒடிசா உட்பட 20 மாநிலங்கள் இணைந்துள்ளன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர், நாகலாந்து, உத்தராகண்ட் ஆகிய 4 மாநிலங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன. இதனால் ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தில் இணைந்திருக்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் மக்கள் தொகையில், 80 சதவீதம் பேர் மேற்குறிப்பிட்ட 24 மாநிலங்களில் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் அட்டை’ திட்டம் தமிழகத்தில் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என கூறப்படு கிறது.

இத்திட்டம் சோதனை அடிப்படை யில் நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்களில் கடந்த பிப்ரவரி மாதம் அமல் படுத்தப்பட்டது. இச்சோதனை வெற்றி பெறும் பட்சத்தில், மாநிலம் முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக இத்திட்டத்தை அமல்படுத்த முடியவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 1-ம் தேதி முதல், ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் அட்டை’ திட்டம் அமல்படுத்தப்படும் என மாநில உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT