அயோத்தியில் ராமர் கோயில் கட்டவேண்டும் என்பதற்காக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 151 ஆறுகள், 8 பெரிய ஆறுகள், 3 கடல்களில் புனித நீரும், இலங்கையில் 16 இடங்களில் மண்ணும் சேகரித்து இரு சகோதரர்கள் அயோத்திக்கு வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் 5-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை நடப்பதால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. அனைத்துக் கோயில்களிலும் வீடுகளிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு, வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது. ஏராளமான பக்தர்கள் ராமர் கோயிலுக்குத் தேவையான கற்கள், மண், புனித நீரைக் கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக கடந்த 1968-ம் ஆண்டிலிருந்து சகோதரர்கள் இருவர் 151 ஆறுகளில் இருந்து புனித நீரையும், 3 கடல்கள், 8 பெரிய ஆறுகளில் இருந்து புனித நீரைச் சேகரித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் ராமர் கோயில் கட்டப்படும் என்ற நம்பிக்கையில் இலங்கை சென்று அங்கு ராமாயணத்தில் வரும் 16 இடங்களில் இருந்து மண் சேகரித்து வந்துள்ளனர்.
ராதே ஷியாம் பாண்டே, ஷாப் வைக்யானிக் மகாகவி திரிபாலா என்ற இரு சகோதரர்கள் தாங்கள் சேகரித்த மண், புனித நீருடன் தற்போது அயோத்தி நகருக்கு வந்துள்ளனர். இருவருக்கும் தற்போது 70 வயதாகிறது.
தங்களின் பயணம் குறித்து ராதே ஷியாம் பாண்டே ஏஎன்ஐ நிருபரிடம் கூறுகையில், “1968-ம் ஆண்டிலிருந்து 52 ஆண்டுகளாக ராமர் கோயில் கட்டப்படும் எனும் நம்பிக்கையில் 151 ஆறுகள், 3 கடல்கள், 8 பெரிய ஆறுகளில் இருந்து புனித நீரைச் சேகரித்து வைத்துள்ளோம்.
அதேபோல ராமர் கோயில் கட்டப்படும் என்ற நம்பிக்கையில் இலங்கை சென்று 16 முக்கிய இடங்களில் இருந்து மண் சேகரித்துள்ளோம். இவை அனைத்தையும் எடுத்துக்கொண்டு ராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்திக்குக் கொண்டு வந்துள்ளோம்.
கடந்த 52 ஆண்டுகளாக கால்நடையாகவும், சைக்கிளிலும், மோட்டார் சைக்கிளிலும், ரயிலிலும், விமானத்திலும் நாங்கள் பயணம் செய்து இந்தப் புனித நீரையும், மண்ணையும் ராமரின் பிறந்த இடத்துக்குக் கொண்டுவந்துள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.