ம.பி. முன்னாள் முதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை நான் வரவேற்கிறேன். நாட்டு மக்கள் இதை நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். ஒவ்வொரு இந்தியரின் ஒப்புதலுடன் ராமர் கோயில் கட்டப்படுகிறது. இது இந்தியாவில் மட்டுமே சாத்தியமாகும்” என்று கூறியுள்ளார்.
இதுபோல காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கடவுள் ராமரே நமது நம்பிக்கையின் மையமாக விளங்குகிறார். ராமர் மீதான நம்பிக்கையுடன் இன்று நமது நாடு இயங்குகிறது. அதனால்தான் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ஒரு பெரிய கோயில் கட்டப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் இதையே விரும்பினார்” என்று கூறியுள்ளார். திக்விஜய் சிங் மற்றொரு பதிவில், “நாட்டில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் முகூர்த்த நேரம் ஜோதிடம் போன்றவற்றில் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகஸ்ட் 5-ம் தேதி அடிக்கல் நாட்டும் நேரம், முகூர்த்த நேரமாக இல்லை. இது மத நம்பிக்கையுடன் விளையாடும் செயலாகும்” என்று கூறியுள்ளார்.