நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை எதிர்த்து மூத்த பத்திரிகையாளர் என். ராம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் அண்மையில் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவையும் முன்னாள் தலைமை நீதிபதிகளையும் விமர்சித்திருந்தார்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் என்.ராம், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இணைந்து நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்களின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில் "நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971 பிரிவு 2(சி) (ஐ), அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானது. அரசமைப்பு சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிராக அமைந்துள்ளது. பொது விவகாரங்கள், அரசியல் சார்ந்த விவகாரங்களில் குடிமக்கள் விருப்பு, வெறுப்பின்றி கருத்துகளை தெரிவிக்க முடியாத சூழலை ஏற்படுத்துகிறது. மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான பிரிவுகளை நீக்க வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது.
11 ஆண்டு பழைய வழக்கு
கடந்த 2009-ம் ஆண்டில் தெஹல்கா இதழுக்கு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பேட்டியளித்தார். அந்த பேட்டியில், 16 முன்னாள் தலைமை நீதிபதிகள் மீது அவர் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினார். இதுதொடர்பாக அப்போது பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது பிரசாந்த் பூஷண் மீது புதிதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் கடந்த ஜூலை 24-ம் தேதி பழைய வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதுதொடர்பாக பிரசாந்த் பூஷண் இப்போது தாக்கல் செய்துள்ள மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார். "கடந்த 11 ஆண்டுகளாக என் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு திடீரென 2 நாள் கால அவகாசத்தில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டது. இந்த அவசரத்துக்கு உள்நோக்கம் இருக்கிறது" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஆதரவாக முன்னாள் நீதிபதிகள், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என 131 பிரபலங்கள் குரல் எழுப்பியுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீதிமன்றம், நீதிபதிகளை விமர்சிப்பவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் வழக்கு தொடர்வது ஏற்புடையது அல்ல" என்று தெரிவித்துள்ளனர்.