ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நேற்று ராட்சத கிரேன் கீழே விழுந்ததில் 6 பொறியாளர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில், ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம் (எச்எஸ்எல்) அமைந்துள்ளது. இங்கு சரக்கு பெட்டகங்களை கையாளும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. கப்பல்களில் வரும் சரக்கு பெட்டகங்களை இறக்குவதற்கு அங்கு ராட்சத கிரேன்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிறுவனத்தில் நேற்று காலை 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத 70 டன் எடையைத் தூக்கும் ராட்சத கிரேனை இயக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. இந்த நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள அனுபம் கிரேன்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும்.
இந்தப் பணியில் பொறியாளர்கள், தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென அந்த ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது. அப்போது, கிரேனின் கேபினில் இருந்த பொறியாளர்கள் மற்றும் கீழே பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்தபடி ஓடி தப்பிக்க முயன்றனர். ஆனால், அந்த ராட்சத கிரேன் கண் இமைக்கும் நேரத்தில் முற்றிலுமாக தரையில் சாய்ந்தது. இதில், கிரேனுக்கு அடியில் பலர் சிக்கி உயிருக்கு போராடினர். உடனடியாக அங்கிருந்தவர்கள் மற்றொரு கிரேனின் உதவியால் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மீட்புக் குழுவினரும், போலீஸாரும் துறைமுகத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் 6 பொறியாளர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்ததாக விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் நவீன் சந்த் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்து குறித்து விசாரணை நடத்த தொழில்நுட்ப குழு மற்றும் வருவாய்த்துறை குழு என 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. முதல் கட்ட விசாரணையில் கிரேனின் அடிப்பாகமும், மேல் உள்ள பாகமும் பிரிந்ததால் கிரேன் சரிந்து விழுந்ததாகத் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.