இந்தியா

பரோலில் வெளிவந்து தலைமறைவானவர் 100 பேரை கொலை செய்த மருத்துவர் மீண்டும் கைது

செய்திப்பிரிவு

டெல்லியில் 100-க்கும் மேற்பட்டோரை கொலை செய்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த மருத்துவர் ஒருவர் பரோலில் வெளிவந்து தலைமறைவானார். அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

டெல்லியைச் சேர்ந்தவர் தேவேந்திர குமார் சர்மா (62). ஆயுர்வேத மருத்துவரான இவர், தன்னிடம் வரும் நோயாளிகளிடம் இருந்து சிறுநீரகங்களை திருடி விற்பதாக 1994-ம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது. இதன்பேரில் கைது செய்யப்பட்ட அவர், சில ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த 2003-ம் ஆண்டில் டெல்லி, ஹரியாணா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏராளமான கார் ஓட்டுநர்கள் மாயமாகி வந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், கார் ஓட்டுநர்களை கடத்தி கொலை செய்ததாக மருத்துவர் தேவேந்திர குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர்.

விசாரணையில், 100-க்கும் மேற்பட்ட கார் ஓட்டுநர்களை கொலை செய்ததையும், அவர்களின் கார்களை விற்று பணம் ஈட்டியதையும் தேவேந்திர குமார் ஒப்புக் கொண்டார். மேலும், அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை உ.பி.யில் உள்ள ஹசாரா ஏரியில் வீசியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார். அந்த ஏரியில் முதலைகள் அதிகம் என்பதால், கொல்லப்பட்டவர்களின் உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், தேவேந்திர குமார் உள்ளிட்டோருக்கு 2004-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன்பேரில், அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த டிசம்பர் மாதம் இரண்டு வாரக்கால பரோலில் வெளியே வந்தார்.

ஆனால், பரோல் காலம் முடிந்தும் அவர் சிறைக்கு திரும்பாததால் அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தெற்கு டெல்லியில் ஒரு வாடகை வீட்டில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT